இந்திய பெருங்கடலில் இந்திய நலனை பாதுகாப்பதில் முன்னுரிமை: ராஜ்நாத் சிங் திட்டவட்டம்

புதுடில்லி: ''இந்தியப் பெருங்கடலில் இந்திய நலன்களை பாதுகாப்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிபட கூறினார்.

கர்நாடகாவின் கார்வார் கடற்படைத் தளத்திற்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று வந்தார். கடல் பாதுகாப்புக்கான சாகர் என்ற கப்பலின் பயணத்தை கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.


அதன் பிறகு அவர் பேசியதாவது:

கடல் பாதுகாப்புக்கான 'சாகர்' திட்டத்தின் 10வது ஆண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். இந்த நேரத்தில், 'சாகர்' கப்பல் இந்தியப் பெருங்கடலுக்கான தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது.இதன் மூலம், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன்களை உறுதிப்படுத்துவதற்கான, நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும்.


சமீபத்தில் இந்தியப் பெருங்கடலில், சீனாவின் அதிகரித்து வரும் ராணுவ செயல்பாடுகள் குறித்து பல நாடுகள் கவலை தெரிவித்துள்ளன,
பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் மட்டுமல்லாமல், வர்த்தகம், பொருளாதாரம், சுற்றுலா, கலாசாரம் மற்றும் ஒட்டுமொத்த தேசிய நலன் ஆகியவற்றின் அடிப்படையிலும் இந்தியப் பெருங்கடல் பகுதி இந்தியாவுக்கு முக்கியமானது,

இது இந்தியாவின் இருப்பு, தேசிய பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பற்றியது மட்டுமல்ல, இந்தியப் பெருங்கடலில் உள்ள அனைத்து நட்பு நாடுகளிடையே சம உரிமைகள் மற்றும் பொறுப்புகளின் கொள்கையையும் பிரதிபலிக்கிறது.

மொரீஷியஸுக்கு சமீபத்தில் விஜயம் செய்தபோது, ​​ பிரதமர் மோடி, சாகர் திட்டத்தை தாண்டி, 'மகாசாகர்' என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார்.

'மஹாசாகர்' என்பது இந்தியப்பெருங்கடல் பிராந்தியத்தில் பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான பரஸ்பர மற்றும் முழுமையான முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இது, இப்பகுதியில் இருக்கும் நாடுகள் இடையே ஒத்துழைப்பை உறுதி செய்யும்.
இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement