கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா பராமரிப்புக்கு தினமும் ரூ.1 லட்சம் செலவு!

17

புதுடில்லி: டில்லி முன்னாள் முதல்வர் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களாவை பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் செலவிடப்பட்டது என்று டில்லி பா.ஜ., தலைவர் விரேந்திர சச்தேவா கூறினார்.


டில்லியில் முதல்வராக இருந்தபோது ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கெஜ்ரிவால் மேற்கு டில்லியில் உள்ள அரசு பங்களாவில் குடியிருந்தார்.

அப்போது, அவர், 2015-மார்ச்-15 முதல் 2022-டிச.27 வரை அந்த சொகுசு பங்களாவின் பராமரிப்பிற்காக, ரூ.29.56 கோடி செலவிட்டுள்ளதாக ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் ஆவணங்களை பகிர்ந்து வீரேந்திர சச்தேவா கூறினார்.


இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் ஊழலின் தலைவன்.

கெஜ்ரிவால் செய்த மோசடிகள் முடிவுக்கு வரவில்லை. அவரது பங்களாவைப் பராமரிக்க ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் எவ்வாறு செலவிடப்பட்டது என்பதை விசாரிக்குமாறு டில்லி அரசிடம் கேட்போம். ஒவ்வொரு பைசாவும் மீட்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.

டில்லி தேர்தலில் தோல்வியடைந்ததிலிருந்து கெஜ்ரிவால் ஊடகங்களைத் தவிர்த்து வருகிறார். ஏனென்றால், ஊழல் குறித்த இந்த முட்கள் நிறைந்த கேள்விகளை அவர் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அவரது பங்களாவில் மாதத்திற்கு ரூ.31 லட்சம் பராமரிப்பு தேவைப்படும் அளவுக்கு என்ன குறைபாடு இருந்தது என்பதை அவர் தாமாக முன்வந்து தெளிவுபடுத்த வேண்டும் என்று டில்லி மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

2015 மற்றும் 2022 க்கு இடையில் கெஜ்ரிவாலின் பழைய குடியிருப்பு பங்களாவின் பொதுவான தேய்மானம், கழிவுநீர், மின்சாரம் மற்றும் கட்டமைப்புப் பணிகளுக்கான பராமரிப்புச் செலவுகள் குறித்த விவரங்களைக் கோரி மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்தார்.


அவருக்கு டிசம்பர் 29, 2023 அன்று பதிலளித்து, செலவுகளின் விவரத்தை வழங்கியது. ஆர்.டி.ஐ., பதிலில் வெளிப்படுத்தப்பட்ட புள்ளிவிவரங்கள் கெஜ்ரிவாலின் ஆடம்பரமான வாழ்க்கை முறையையும் அரசுப் பணிகளில் ஊழலையும் அம்பலப்படுத்துகின்றன,

டில்லியில் 250-300 சதுர அடி பரப்பளவு கொண்ட பங்களாவை ரூ.3-4 கோடியில் கட்ட முடியும்.
பங்களாவின் பராமரிப்பு செலவு ஆண்டுக்கு ரூ.3.69 கோடி என்பது ஆச்சரியமளிக்கிறது.

இவ்வாறு வீரேந்திர சச்தேவா கூறினார்.

Advertisement