அரசு மருத்துவமனைக்குள் நுழைந்த மழை நீரால் நோயாளிகள் அவதி

கோவை : நேற்று பெய்த மழையில், கோவை அரசு மருத்துவமனைக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்தனர்.

கோவையில், கடந்த சில நாட்களாக மாலையில் நல்ல மழை பெய்தது. நேற்று மாலை, பீளமேடு, ரயில் நிலையம், டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

சுமார் அரை மணி நேரம் பெய்த மழையில் மாநகரின் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது. இதில், அரசு மருத்துவமனை வளாகத்தில், மழை நீர் வடிகாலில் அடைப்பு ஏற்பட்டு, பழைய கட்டடத்தில் உள்ள எம்.எம்., வார்டுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்கள் நடமாட முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மழை நீரை அப்புறப்படுத்தினர்.

Advertisement