'தினமலர்' வழிகாட்டி நிறைவு! மாணவர், பெற்றோர் ஆர்வப்பெருக்கு; 'உயர்கல்வி வசமாகும்' என நம்பிக்கை

திருப்பூர்; திருப்பூரில் 2 நாள் நடந்த 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி நேற்று நிறைவடைந்தது. நிறைவு நாளில், மாணவ, மாணவியர், பெற்றோர் ஆர்வமுடன் பங்கேற்று, உயர்கல்வி குறித்த சந்தேகங்களுக்கு தெளிவு பெற்று மகிழ்ச்சியடைந்தனர்.
'தினமலர்' நாளிதழ், கோவை ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ், கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அமிர்தா விஸ்வ வித்யா பீடம், கே.எம்.சி.எச்., டாக்டர் என்.ஜி.பி., எஜூகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், கற்பகம் இன்ஸ்டிடியூஷன்ஸ், ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, தி இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டட் அக்கவுன்டன்ட்ஸ் ஆப் இந்தியா ஆகியன சார்பில், 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, திருப்பூர் வித்யா கார்த்திக் திருமண மண்டபத்தில் நேற்றுமுன்தினம் துவங்கியது. முதல் நாளில் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் ஏராளமான மாணவ, மாணவியர், பெற்றோர் பங்கேற்றனர்.
நிறைவு நாளான நேற்று 'கலை அறிவியல் படிப்பு வாய்ப்பு' எனும் தலைப்பில், கோவை எஸ்.என்.ஆர்., கல்லுாரி, தமிழ்ப் பேராசிரியர் ஜெயபால், 'மரைன் கேட்டரிங் ஓட்டல் மேனெஜ்மென்ட்' குறித்து மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி கல்லுாரி மரைன் கேட்டரிங் துறைத்தலைவர் சுரேஷ்குமார், 'உயர்கல்வி வாய்ப்புகள்' எனும் தலைப்பில், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலர் சுதா, 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' எனும் தலைப்பில், ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு, நீட் - ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது குறித்து கல்வி ஆலோசகர் அஸ்வின் ஆகியோர் உரையாற்றினர்.
சிறந்த பல்கலைக்கழகங்கள், தலைசிறந்த உயர்கல்வி நிறுவனங்களின், 70க்கும் மேற்பட்ட அரங்குகளை மாணவ, மாணவியர், பெற்றோர் பார்வையிட்டு, தங்கள் உயர்கல்வி படிப்பு, அப்ளிகேஷன் முதல் அட்மிஷன் வரை விபரங்களை கேட்டு, தெளிவு பெற்றனர்.
'சந்தேகங்கள் நீங்கியதால், உயர்கல்வியில் சாதிப்போம்' என்று மாணவ, மாணவியர் நம்பிக்கை தெரிவித்தனர்.