தர்மத்தை பின்பற்றும் தொழில் முனைவோரை உருவாக்க இலக்கிய விழாவில் வலியுறுத்தல்

சென்னை,:'பிரக்ஞா ப்ரவாஹ்' எனும் தேசிய சிந்தனை பேரவை சார்பில், 'சென்னை லிட் பெஸ்ட் - 2025' இலக்கிய விழா, சென்னை, மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம்.ஜெயின் கல்லுாரியில் நேற்றுமுன்தினம் துவங்கியது.

இதில், 'முருகன் உலகளாவிய கடவுள்' என்ற தலைப்பில், எழுத்தாளர் பிரபாகரன் பேசியதாவது:

சங்க இலக்கியங்களில் அதிகமாக குறிப்பிடப்பட்ட கடவுள் முருகன். முருகன் என்றால் தமிழ் கடவுள்; சுப்பிரமணியன் என்றால் வட நாட்டு கடவுள் என்ற மாயை உருவாக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு உண்மையை உணர்த்தும் நுாலாக திருமுருகாற்றுப்படை உள்ளது.

கிரீஸ் நாட்டின் கீழ் பகுதியில் உள்ள, கிரீட் தீவு மக்கள், ஒலிம்பிய மலையில், காளை மாடு மேல் அமர்ந்திருக்கும் 'ஜூஸ்' எனும் கடவுளை வணங்குகின்றனர். கையில் சேவல் வைத்திருக்கும் படம், நாணயத்தில் பொறிக்கப்பட்டு உள்ளது. அந்த நாணயங்கள், துருக்கியில் உள்ள இஸ்தான்புல் மற்றும் பிரிட்டிஸ் மியூசியத்தில் உள்ளன.

அதேபோல், ஈராக்கில் உள்ள சில பகுதி மக்களின் சின்னமாக மயில் உள்ளது. இன்றைய தென் ஈராக்கில் உள்ள சுமேரியாவில், இளமைக் கடவுளாக 'குமர்பி' உள்ளார். அங்குள்ள ஆறு, அவருடைய வாயில் இருந்து பிறந்ததாக குறிப்பிடுகின்றனர்.

குமர்பி என்றால் 'குமரன்' என்று உள்ளது. அந்த நிலம் குமரி நாடு என்றும், அந்த ஆறு, குமரி ஆறு என்றும் இதில் இருந்து தெளிவாகிறது எனவே, முருகன் தமிழ் கடவுள் மட்டும் அல்ல; உலகளாவிய கடவுளாக உள்ளார்.

இவ்வாறு அவர் பேசினார்.

இரண்டாம் நாளான நேற்று, 'கலாசாரம் மற்றும் சமூகத்தை பாதுகாப்பதில், புது யுக வணிகங்களின் பங்கு' என்ற தலைப்பில், டி.வி.எஸ்., கேபிடல் பண்ட்ஸ் நிறுவனத் தலைவர் கோபால் சீனிவாசன் பேசியதாவது:

கலாசாரம், தர்மம் மற்றும் உணர்வை கற்பிக்கும் கல்வி முறை, நம்மிடம் இல்லை எனில், அவற்றை பின்பற்றுவது சந்தேகம் தான்.

பள்ளிக்கு சென்றால், ராமாயணம், மஹாபாரதம் படிக்கலாம் என்கிற எண்ணம் உருவாக வேண்டும்.

கல்வியை புராணங்கள் முதல் தற்போது உள்ளவை வரை கற்க வேண்டும். அப்போது தான் தர்மத்தை பின்பற்றும் தொழில் முனைவோராக, முதலீட்டாளர்களாக நிலைப்பர்.

நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் குறிப்பிட்ட தொகையை, சமூக சேவைக்கு செலவிட வேண்டும். அதன் வாயிலாகவும் வணிகத்தில் தர்மத்தை கடைபிடிக்கலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement