ரூ.3.2 கோடி தங்க கட்டிகள் கொள்ளை காங்., கவுன்சிலர் உட்பட 4 பேர் கைது

2

கர்நாடக மாநிலம், தங்கவயலைச் சேர்ந்த நகை வியாபாரி, தீபக்குமார், 45. இவர், சென்னையில் இருந்து தங்க கட்டிகளை வாங்கி வந்து, நகைகள் செய்து, தங்கவயலில் நகைக் கடை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது வழக்கம்.

கடந்த 2ம் தேதி, தங்க கட்டி வாங்கி வருவதற்காக சென்னைக்கு காரில் சென்றார். காரை முக்ரம், 47, என்பவர் ஓட்டினார். இந்த தகவலை, தன் நண்பர் ராபர்ட்சன்பேட்டை ஜலீல் என்பவரிடம் முக்ரம் தெரிவித்துள்ளார்.

ஜலீல், தன் நண்பரான, தங்கவயல் நகராட்சியின் காங்கிரஸ் கவுன்சிலர் ஜெயபால் என்பவரிடம் தெரிவித்துள்ளார். தங்க கட்டிகளை பறிக்க இவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சென்னையில் இருந்து தங்க கட்டிகளுடன் புறப்பட்ட கார், பேர்ணாம்பட்டு வழியாக, ஆந்திராவின் நாயக்கனேரி வனப்பகுதியில் வருவதாக, முக்ரம் தகவல் கொடுத்து உள்ளார்.

ஒரு கும்பல், காரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி, 3.2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3.5 கிலோ எடை கொண்ட ஐந்து தங்க கட்டிகளை பறித்து தப்பியது.

மறுநாள் காலை, ஆந்திர மாநிலம், வி.கோட்டா போலீஸ் நிலையத்தில் தீபக்குமார் புகார் செய்தார். சித்துார் மாவட்ட எஸ்.பி., அமைத்த நான்கு தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு, வழிப்பறி கும்பலை கண்டறிந்தனர்.

சம்பவம் தொடர்பாக ஜெயபால், முக்ரம், தங்கவயல் மாரிகுப்பம் கே.ஆர்.பாபு, கோரமண்டல் சண்முகம் ஆகிய நான்கு பேரை, போலீசார் கைது செய்தனர்.


அவர்கள் வசம் இருந்த 3.5 கிலோ தங்க கட்டிகளையும், வழிப்பறிக்கு பயன்படுத்திய இன்னோவா காரையும் பறிமுதல் செய்தனர். நான்கு பேரும் சித்துார் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒன்பது பேரை போலீசார் தேடி வருகின்றனர்

- நமது நிருபர் -.

Advertisement