கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற மனைவி, 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது

பல்லாரி : சந்தேகப்பட்ட கணவரை, தனது நண்பர், அவரது கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி, இரு சிறுவர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

பல்லாரி மாவட்டம், சிரிகுப்பாவின் கொன்சகேரி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ். இம்மாதம் 4ம் தேதி தனது கணவர் வெங்கடேஷ் தலையில் மர்ம நபர்கள் கல்லை போட்டு கொலை செய்ததாக, அவரது மனைவி நீலவேணி, போலீசில் புகார் செய்தார்.

ஆனால், வெங்கடேஷின் குடும்பத்தினர், 'மனைவி நீலவேணியும் அவரது குடும்பத்தினரும் சேர்ந்து தான் கொலை செய்துள்ளனர்' என்று புரூஸ்பேட் போலீசில் புகார் அளித்தனர்.

எஸ்.பி., தகவல்



இது தொடர்பாக விசாரணைக்கு பின், மாவட்ட எஸ்.பி., ஷோபாராணி நேற்று அளித்த பேட்டி:

இம்மாதம் 4ம் தேதி, வெங்கடேஷ் மனைவி நீலவேணி, மர்ம நபர்கள் தனது கணவரை தாக்கி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டனர் என்று புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், விசாரித்த போது, வெங்கடேஷ் கொலையில் நீலவேணிக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அவரை அழைத்து விசாரித்த போது, கணவரை கொன்றதை ஒப்புக் கொண்டார். நீலவேணியும், ஆனந்த் என்பவரும் சேர்ந்து 'ஷாமியானா' பந்தல் போடும் தொழில் செய்து வருகின்றனர். இதனால் இருவருக்கும் இடையே நெருக்கம் ஏற்பட்டது.

இது தொடர்பாக வெங்கடேஷ், நீலவேணி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இம்மாதம் 3ம் தேதி வெங்கடேஷ் வீட்டில் நடந்த நிகழ்ச்சியின் போது, அங்கிருந்த தனது உறவினர்கள் முன்னிலையில், மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

மது விருந்து



இதனால் கோபத்தில் இருந்த நீலவேணி, சம்பவம் தொடர்பாக ஆனந்திடம் தெரிவித்தார். அன்றிரவு, மது அருந்த வெங்கடேசை தனது இரு சக்கர வாகனத்தில் சிலர் அழைத்து சென்றனர்.

ராணிபெட் சுடுகாடு அருகில் சென்றவுடன், அங்கு தயாராக இருந்த ஆனந்த், அவரது கூட்டாளிகள் சேர்ந்து, வெங்கடேசை தாக்கி, தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளனர். பின், அவரது ஆடைகளை அகற்றி விட்டு, நிர்வாணமாக்கி விட்டு சென்றது தெரியவந்தது.

இவ்வழக்கில், நீலவேணி, ஆனந்த், சிரு, முகமது ஷாஹித், துட்டா, முகமது ஷெரிப், முகமது ஆசிப், முகமது சொஹெய்ல், முகமது கவுஸ் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இதில் தொடர்புடைய இரு சிறுவர்கள் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய இரு பைக்குகள், ஒரு ஸ்கூட்டர், ஐந்து மொபைல் போன்கள், இரண்டு அரிவாள்கள் உட்பட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement