விதான் சவுதாவில் மின் விளக்கு அலங்காரம் முதல்வர் சித்தராமையா துவக்கி வைப்பு

பெங்களூரு : பெங்களூரின் விதான் சவுதாவில், மின் விளக்கு அலங்காரத்தை முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.

சுதந்திர தினம், குடியரசு தினம் உட்பட சிறப்பு நாட்களில் மட்டும், பெங்களூரின் விதான் சவுதா, மின் விலக்கு அலங்காரம் செய்வது வழக்கம். இனி விதான்சவுதாவில் நிரந்தர மின் விளக்குகள் அலங்காரம் இருக்கும். வாரந்தோறும் சனி, ஞாயிற்று கிழமைகளில், விதான்சவுதா மின் விளக்குகளால் ஜொலிப்பதை காணலாம்.

மின் விளக்குகள் அலங்காரத்தை, முதல்வர் சித்தராமையா, நேற்றிரவு துவக்கி வைத்து பேசியதாவது:

பார்லிமென்டும், சட்டசபையும் நாட்டின் பிரச்னைகள் குறித்து விவாதித்து, தீர்வு காணும் கோவில்கள். அரசின் பணி, கடவுளின் பணியாகும். ஒவ்வொருவரும் அர்த்தமுள்ள வகையில் பணியாற்றி, மாநிலத்தின் கடை கோடி மனிதனும் நிம்மதியுடன் வாழ வழி செய்ய வேண்டும்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்து, அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்தும், வேற்றுமையை அகற்ற முடியவில்லை. விதான் சவுதா, விகாஸ் சவுதா, சுவர்ண விதான்சவுதாவில் அமர்ந்து சமுதாயத்துக்காக உழைக்க வேண்டும். சட்டம் - ஒழுங்கு சரியாக இருக்க வேண்டுமானால், வேற்றுமை அழிய வேண்டும்.

சரியாக பணியாற்ற வேண்டும் என்ற காரணத்தால், மக்கள் நம்மை தேர்ந்தெடுத்து, விதான்சவுதா எனும் சட்டசபைக்கு அனுப்பியுள்ளனர். இந்த நோக்கத்தை நிறைவேற்றி, மக்களின் பிரச்னைக்கு தீர்வு காணும் சக்தி, நமக்கு கிடைக்கட்டும்.

மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த ஆலோசிக்கலாம். விதான்சவுதாவுக்கு நிரந்தர மின் விளக்குகள் அலங்காரம் செய்ய, அக்கறையுடன் பணியாற்றிய சபாநாயகர் காதருக்கு நன்றி.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement