கடும் எதிர்ப்பு காணாமல் போச்சு; புதிய சட்டத்தில் வக்ப் வாரியம் அமைக்கிறது கேரளா!

திருவனந்தபுரம்: மத்திய அரசு கொண்டு வந்த வக்ப் திருத்த சட்ட மசோதாவுக்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் புதிய வக்ப் வாரியம் செயல்பாட்டுக்கு வர உள்ளது.
கிறிஸ்துவ சமுதாயத்தினரை உள்ளடக்கிய பிஷப்புகளின் கூட்டமைப்பும், இந்த சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதா, லோக்சபாவில் கடந்த 2ம் தேதி, 14 மணி நேர விவாதத்திற்குப் பின்னும், ராஜ்யசபாவில், 17 மணி நேர விவாதத்திற்கு பிறகும் நிறைவேறியது. இதற்கு ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்து விட்டார்.
எனினும், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், வக்ப் சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பார்லியில் கடும் ரகளையில் ஈடுபட்டு வெளிநடப்பும் செய்தனர்.
கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக கூட்டணி தலைமையிலான அரசும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சியும் புதிய சட்டத்தை கடுமையாக எதிர்த்தன. வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக கேரள சட்டபையில் ஒருமனதாக தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இப்படி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த கேரளா, நாட்டிலேயே முதல் மாநிலமாக புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரியத்தை ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இன்னும் 2 மாதங்களில் புதிய வக்ப் வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.
கேரளா வக்ப் அமைச்சர் அப்துல் ரகீம், 'புதிய சட்டத்தின் கீழ் வக்ப் வாரிய நிர்வாகிகள் தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நடைமுறைகள் அனைத்தும் ஒரு மாதத்தில் முடிக்கப்பட்டு விடும்' என்றார்.
எதிர்க்கட்சிகளுக்கு பிஷப் கண்டனம்
மத்திய அரசு கொண்டு வந்த புதிய வக்ப் திருத்த சட்டத்தை ஆதரிக்கும்படி கேரள பிஷப்கள் கூட்டமைப்பு அனைத்து எம்.பி.,க்களுக்கும் வேண்டுகோள் விடுத்தது. ஆனால், கேரளா பா.ஜ., எம்.பி., சுரேஷ் கோபியை தவிர , மற்ற அனைத்து எம்.பி.,க்களும், வக்ப் திருத்த சட்டத்தை எதிர்த்து ஓட்டளித்தனர்.
இதற்கு பிஷப்களின் அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. பாலா பிஷப் மார் ஜோசப் கல்லாரன்காட், கடுமையான கண்டனத்தை பதிவு செய்தார். கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில், கத்தோலிக்க பிஷப் மாநாடு ஆகிய அமைப்புகள் தங்கள் கவலையை பதிவு செய்த நிலையிலும், சட்டத்தை எதிர்த்து எம்.பி.,க்கள் ஓட்டளித்துள்ளனர்.
அவர்கள் ஓட்டெடுப்பை புறக்கணித்திருக்க வேண்டும் அல்லது வேறு ஏதாவது மற்ற தீர்வுகளை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு பதிலாக, தங்கள் கட்சியின் நிலையை எடுத்தது கண்டனத்துக்கு உரியது என்று பிஷப் தெரிவித்துள்ளார்.










