டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி கேட்கவில்லை: ரகுபதி
சென்னை: ''டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி உச்ச நீதிமன்றத்தில் கோரவில்லை,'' என, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.
சட்டசபை வளாகத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
'டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என, தமிழக அரசு கேட்பது ஏன்?' என்று எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி கேட்டுள்ளார்.
எங்களுக்கு மடியில் கனமும் இல்லை; வழியில் பயமும் இல்லை. எங்கள் கோரிக்கையை அவர் பார்க்கவில்லை. உயர் நீதிமன்றத்தில் உள்ள டாஸ்மாக் வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக சேர்த்து, உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கும்படி கேட்டுள்ளோம்; வேறு மாநிலத்திற்கு மாற்றும்படி கேட்கவில்லை.
கடந்த 2016 - 2021ம் ஆண்டு குற்றச்சாட்டு அடிப்படையில், டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. எந்த விபரமும் வெளியிடப்படவில்லை.
டாஸ்மாக்கில், 1,000 கோடி ரூபாய் முறைகேடு என, தமிழக பா.ஜ., தலைவர் கூறுகிறார்; அமலாக்கத்துறையும் கூறியது. டில்லி சென்று வந்த பின், எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமியும் கூறுகிறார். இதிலிருந்தே இவர்களுக்கு இடையிலான தொடர்பு தெரியும்.
எங்கள் ஆட்சியில், டாஸ்மாக்கில் எந்த ஊழலும் இல்லை என்பதை, நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். எந்த தவறுக்கும், எங்கள் தலைவர் இடம் கொடுக்கவில்லை.
டாஸ்மாக் குறித்து சட்டசபையில் பேச அனுமதிக்கவில்லை என்கிறார் பழனிசாமி. நீதிமன்றத்தில் உள்ள வழக்கு குறித்து பேசக்கூடாது.
இலங்கை சென்ற பிரதமர் மோடி, மீனவர்கள் பிரச்னை குறித்து பேசவில்லை. பெரும்பாலான மீனவர்கள், நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி, விடுதலையாகி நாடு திரும்பி உள்ளனர். மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என்பதற்காக, 576 கோடி ரூபாய்க்கு பல்வேறு திட்டங்களை முதல்வர் அறிவித்துஉள்ளார்.
அமலாக்கத்துறை, பா.ஜ.,வின் கூட்டணி கட்சி; அரசியல் முத்திரை குத்தப்படாத கூட்டணி கட்சி.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது, எந்தவித சந்தேகமும் கிடையாது. அவர்களுக்கு எந்த கெட்ட பெயரும் வந்து விடக்கூடாது. இந்த வழக்கை நிம்மதியாக முடிப்பதற்காக, உச்ச நீதிமன்றம் சென்றுள்ளோம்.
இவ்வாறு அமைச்சர் ரகுபதி கூறினார்.