ரூ.10 கோடி மதிப்பு ரயில்வே இடம் மீட்பு

பெரம்பூர்,
பெரம்பூர் வட்டம், சர்வே எண்: 353/1ல் அமைந்துள்ள ரயில்வேக்கு சொந்தமான, 6,800 சதுர அடி இடத்தில், கடந்த 25 ஆண்டுகளாக காவல் துறை அதிகாரிகள் குடியிருப்புகள் இருந்தன.
அந்த கட்டடம் சேதமடைந்ததை தொடர்ந்து, புதிய கட்டடம் கட்டும் பணிக்கு திட்டமிடப்பட்டு, குடியிருப்பு காலி செய்யப்பட்டது.
ஆனால், புதிய கட்டடம் கட்டும் பணி துவங்க தாமதமானதால், அந்த இடத்தை சிலர் ஆக்கிரமித்து, கடை மற்றும் வீடுகளை கட்டியிருந்தனர்.
இதுகுறித்த வழக்கு, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், வழக்கில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, நேற்று காலை நடந்தது. செம்பியம் போலீசார் பாதுகாப்புடன், 10 கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள், நேற்று இடித்து அகற்றப்பட்டன.