சென்னை தோல்வி ஏன் * பயிற்சியாளர் பிளமிங் புலம்பல்

முல்லன்புர்: ''பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சற்று முன்னேற்றம் அடைந்தாலும், கடைசியில் தோற்றது ஏமாற்றம் தருகிறது,'' என பிளமிங் தெரிவித்துள்ளார்.
பிரிமியர் அரங்கில் தோனி தலைமையில் ஐந்து கோப்பை (2010, 2011, 2018, 2021, 2023) வென்ற அணி சென்னை. தவிர சாம்பியன்ஸ் லீக் (2010, 2014) அரங்கிலும் 2 முறை கோப்பை கைப்பற்றியது.
தற்போது கேப்டன் ருதுராஜ் தலைமையில் தடுமாறுகிறது. 2024ல் 5வது இடம் பிடித்தது. இம்முறை முதல் போட்டியில் மும்பையை வீழ்த்தி, தொடரை வெற்றிகரமாக துவக்கியது. இதன் பின் தொடர்ந்து 4 போட்டியில் (பெங்களூரு, ராஜஸ்தான், டில்லி பஞ்சாப்) தோற்றது.
இதுகுறித்து சென்னை பயிற்சியாளர் பிளமிங் கூறியது: பஞ்சாப் போட்டியில் இரு தரப்பிலும் கேட்ச் வாய்ப்புகளை நழுவவிட்டனர். இதற்கு ஒளி பிரச்னையும் காரணமாக இருக்கலாம். இருப்பினும் சென்னை அணியின் 'பீல்டிங்' முன்னேற்றம் அடைய வேண்டும்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் பஞ்சாப் அணிக்கு எதிராக 'டாப் ஆர்டர்' வீரர்கள் சற்று முன்னேற்றம் அடைந்தது ஆறுதல். இதனால் தான் கடைசி வரை போராட முடிந்தது. இருப்பினும் 'மிடில் ஓவர்களில்' தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டு இருக்க வேண்டும். இதை சரியாக செய்யாததால், கடைசி நேரத்தில் நெருக்கடி அதிகரித்தது. பஞ்சாப் வீரர் பிரியான்ஷ் ஆர்யா சிறப்பாக விளையாடினார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேப்டன் ருதுராஜ் கூறுகையில்,'' பஞ்சாப் போட்டியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். ஆனால் சில 'கேட்ச்சுகளை' நழுவவிட்டது ஏமாற்றம் ஆனது. பேட்டிங்கில் முன்னேற்றம் அடைந்துள்ளோம்,'' என்றார்.

நழுவிய '11'
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் சென்னை அணி, 6 'கேட்ச்' வாய்ப்புகளை கோட்டை விட்டது. இதுவரை பங்கேற்ற ஐந்து போட்டிகளில் சென்னை அணி, 11 'கேட்ச்' நழுவவிட்டது.

Advertisement