போலி நகைக்கு ரூ.63 கோடி கடன்; காங்., தலைவரை கைது செய்த ஈ.டி.,

11


பெங்களூரு : போலி நகைகளுக்கு 62.77 கோடி ரூபாய் கடன் கொடுத்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் பிரமுகரான மலைநாடு மேம்பாட்டு ஆணைய தலைவர் மஞ்சுநாத் கவுடாவை, ஈ.டி., எனப்படும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. ஷிவமொக்காவில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி உள்ளது. காங்., பிரமுகர் மஞ்சுநாத் கவுடா, 1997 முதல் 2020 வரை இந்த வங்கியின் தலைவராக இருந்தார்.

இந்த வங்கியில் போலி நகைகளை அடகு வைத்து பலர் கடன் பெற்றதாகவும், 62.77 கோடி ரூபாய் மோசடி நடந்து இருப்பதாகவும் 2014ல் குற்றச்சாட்டு எழுந்தது. சி.ஐ.டி., போலீசாரால் மஞ்சுநாத் கவுடா கைது செய்யப்பட்டு, ஜாமினில் வந்தார். நீதிமன்றத்தில் அவர் மீது குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாக அமலாக்கத் துறைக்கு தகவல் கிடைத்தது. அவர்கள் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணைக்கு ஆஜராக, 2022ல் மஞ்சுநாத் கவுடாவுக்கு, அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.

அந்த சம்மனை ரத்து செய்யக்கோரி, உயர் நீதிமன்றத்தில் மஞ்சுநாத் கவுடா மனு தாக்கல் செய்தார். இந்த மனு சமீபத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இதையடுத்து, கடந்த 7ம் தேதி ஷிவமொக்காவில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி, மஞ்சுநாத் கவுடாவின் ஆதரவாளர்கள் வீடுகளில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. பெங்களூரின் சில இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. இதில், சில முக்கிய ஆவணங்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர்.

பெங்களூரு சாம்ராஜ் நகரில் உள்ள அபெக்ஸ் வங்கி விருந்தினர் மாளிகையில், நேற்று முன்தினம் இரவு மஞ்சுநாத் கவுடா தங்கி இருந்தார். அங்கு வந்த அமலாக்கத் துறை அதிகாரிகள், அவரை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று காலை அவர் கைது செய்யப்பட்டார்.

மருத்துவ பரிசோதனை முடிந்தபின், பெங்களூரு பொருளாதார குற்றப்பிரிவு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரிடம் 14 நாட்கள் விசாரணை நடத்த, அமலாக்கத் துறைக்கு நீதிபதி அனுமதி வழங்கினார். மஞ்சுநாத் கவுடா தற்போது மலைநாடு மேம்பாட்டு ஆணைய தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement