தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு தனித்துவமான வணிக குறியீடு: அமைச்சர்

சென்னை : ''தமிழகத்தில் தயாரிக்கும் தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு, சந்தை அங்கீகாரம் பெற, தனித்துவமான வணிக குறியீடு உருவாக்கப்படும்,'' என, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:

இயற்கையாக அமைந்துள்ள தொழில் குழுமங்களின் பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்த, அக்குழுமங்களின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளுக்கு, 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்

பழங்குடியினர் நிறைந்த பகுதிகளில் தொழில் துவங்க, கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், 100 கோடி ரூபாய் கடனுதவி வழங்க சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்

கிராம அளவிலான கைவினை குழுக்கள் மற்றும் குறுந்தொழில் குழுமங்களில், மூலப்பொருட்கள், உற்பத்தி பொருட்களை பாதுகாக்கும் வகையில், உள்கட்டமைப்பு வசதிகள், 18.18 கோடி ரூபாயில் ஏற்படுத்தி தரப்படும்

உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் வாயிலாக தேங்காய், மஞ்சள், முருங்கை, சிறுதானியங்கள், பாரம்பரிய அரிசி சார்ந்த தயாரிப்புகளுக்கு, பொதுவான வணிக குறியீடுகள், 3.62 கோடி ரூபாயில் உருவாக்கப்படும்

'இண்ட்கோ' நிறுவனத்தின் தேயிலை சாகுபடிக்கு தேவைப்படும் விவசாய இயந்திரங்கள், 3.25 கோடி ரூபாயில் கொள்முதல் செய்யப்பட்டு வழங்கப்படும்

தமிழகத்தில் தயாரிக்கும் தென்னை நார் சார்ந்த பொருட்களுக்கு சந்தை அங்கீகாரம் பெற, தனித்துவமான வணிகக் குறியீடு உருவாக்கப்படும்

கடலுார் மாவட்டம், சிதம்பரம் லால்புரத்தில், 'கவரிங்' நகை உற்பத்தியாளர்களுக்கு ஐந்து ஏக்கரில், 1.24 கோடி ரூபாயில், 'சிட்கோ' நிறுவனம் வாயிலாக, புதிய தொழிற்பேட்டை அமைக்கப்படும்

அரியலுார் மாவட்டம், செந்துறை வட்டம் பரணத்தில், 2.84 கோடி ரூபாயில், நவீன முந்திரி பதப்படுத்தும் குழுமம் அமைக்கப்படும்

ஈரோடு பெருந்துறை சீனாபுரத்தில், 7.77 கோடி ரூபாயில் நெசவு குழுமம் அமைக்கப்படும்

'சிட்கோ' நிறுவனத்தின் 18 தொழிற்பேட்டைகளில், 40 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்

தமிழக இளைஞர் புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டு திட்டம், 2,000 உயர் கல்வி நிறுவனங்களில், 19 கோடி ரூபாயில், 'நிமிர்ந்து நில்' என்ற பெயரில் செயல்படுத்தப்படும்

விண்வெளி தொழில்நுட்பம், கடல்சார் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில் இயங்கும் புத்தொழில் நிறுவனங்களுக்கு தகுந்த ஆதரவு வழங்கும் விதமாக, துாத்துக்குடியில் புதிய வட்டார புத்தொழில் மையம் அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement