46% பேருக்கு அறிகுறி இல்லா இதய பாதிப்பு: அப்பல்லோ மருத்துவ குழும ஆய்வறிக்கையில் தகவல்

சென்னை : 'இந்தியாவில், நோய் அறிகுறி இல்லாமல், 46 சதவீதம் பேர் இதய பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, அப்பல்லோ மருத்துவ குழும ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அப்பல்லோ மருத்துவக் குழுமம் சார்பில், 'ப்ரோஹெல்த்' நோய் தடுப்பு பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுதும், 25 லட்சம் பேருக்கு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில் கிடைத்த தகவலின் அடிப்படையில், 'ஹெல்த் ஆப் தி நேஷன் ஆய்வறிக்கை - 2025' வெளியிடப்பட்டுள்ளது.


அதில், மதுப்பழக்கம் உடைய, 85 சதவீதம் பேருக்கு கல்லீரல் பாதிப்பு, 46 சதவீதம் பேருக்கு அறிகுறி இல்லாமல் இதய பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.


மேலும், மாதவிடாய் நின்ற பிறகு, நீரிழிவு நோயால் 40 சதவீதம் பேர், உடல் பருமனால் 86 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கல்லுாரி மாணவர்களில், 28 சதவீதம் பேர் உடல் பருமனாகவும், அவர்களில், 19 சதவீதம் பேருக்கு, உயர் ரத்த அழுத்த பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 77 சதவீத பெண்கள், 82 சதவீத ஆண்கள், 'வைட்டமின் டி' குறைபாடுடன் உள்ளனர்.

இதுகுறித்து, அப்பல்லோ மருத்துவக்குழுமத் தலைவர் பிரதாப் சி ரெட்டி கூறியதாவது:



இந்த ஆய்வறிக்கை வாயிலாக, நோயின் அறிகுறிகள் தெரியும் வரை காத்திருக்க வேண்டாம். நோய்களுக்கான அறிகுறிகள் உடலில் தெரியும் முன், பரிசோதனை செய்து நோயை தடுக்க வேண்டியது அனைவரின் கடமையாகும். ஒவ்வொரு குடும்பமும் ஆரோக்கியமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வாய்ப்பை வழங்குவது, ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்கும். இவ்வாறு அவர் கூறினார்.


அப்பல்லோ மருத்துவக் குழும செயல் துணைத் தலைவர் பிரீத்தா ரெட்டி கூறுகையில், ''மாதவிடாய் நின்ற பின், பெண்களுக்கு ஏற்படும் வளர்சிதை மாற்ற பிரச்னைகளுக்கு, வழக்கமான பரிசோதனைகள் மட்டும் போதாது. அந்தந்த வயதுக்கு ஏற்ற, பாலினத்துக்கு ஏற்ற சேவைகள் வாயிலாக, பெண்களுக்கான, தனித்துவமான தேவையை பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது,'' என்றார்.

Advertisement