பொய் கூறியதால் மகளை கொன்ற தாய்க்கு 'ஆயுள்'

பெங்களூரு: தேர்வில் நான்கு பாடங்களில் தோல்வி அடைந்து 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக, பொய் கூறியதால் மகளை கத்தியால் குத்தி கொன்ற தாய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

ஆந்திராவை சேர்ந்தவர் பீமானேனி மகேஸ்வர் ராவ். இவரது மனைவி பத்மினி ராணி, 59. இந்த தம்பதியின் மகள் சாகிதி சிவபிரியா, 17.பெங்களூரு பனசங்கரி சாஸ்திரி நகரில் வசித்தனர். 2020ல் உடல்நலக்குறைவால் மகேஸ்வர் ராவ் இறந்தார். இதனால் மகளுடன், தாய் தனியாக வசித்தார்.

கணவர் இல்லாததால் மகள் மீது அன்பு காட்டினார். ஆனால் தாயின் அன்பை சாகிதி சிவபிரியா புறக்கணித்தார். தாய்க்கு மூட்டு அறுவை சிகிச்சை செய்த போது கூட, மகள் எந்த உதவியும் செய்யவில்லை.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான, பி.யு.சி., தேர்வு முடிவில் 95 சதவீத மதிப்பெண் பெற்று வெற்றி பெற்றதாக தாயிடம், மகள் கூறி இருந்தார்.

பின், ஒரு பாடத்தில் மட்டும் தோல்வி அடைந்ததாகவும், அதற்கு காரணம் நீ தான் என்று கூறி தாயை, மகள் திட்டி உள்ளார்.

ஒரு பாடத்தில் இல்லை நான்கு பாடத்தில் சிவபிரியா தோல்வி அடைந்தது தெரிந்தது. இதுபற்றி பத்மினி கேட்ட போது சரியாக பதில் சொல்லவில்லை.

கோபம் அடைந்த பத்மினி சமையல் அறையில் இருந்த, இரண்டு கத்திகளை எடுத்து வந்து சிவபிரியாவை சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

பின், தற்கொலைக்கு முயன்றார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சைக்கு பின் பனசங்கரி போலீசார் கைது செய்து, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைத்தனர். சில மாதங்களுக்கு முன்பு அவருக்கு ஜாமின் கிடைத்தது.

கொலை வழக்கு தொடர்பாக பெங்களூரு செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணை முடிந்த நிலையில் நேற்று முன்தினம் தீர்ப்பு கூறிய நீதிபதி பாஸ்கர், பத்மினிக்கு ஆயுள் தண்டனை மற்றும் 50,000 ரூபாய் அபராதம் விதித்தார்.

Advertisement