கபடியில் அசத்தும் துர்கி குடும்பம்

பெலகாவி, அதானி தாலுகாவில் உள்ளது ஷினால் கிராமம். இந்த கிராமத்தில் துர்கி என்ற பட்டப்பெயரை கொண்ட கூட்டுக்குடும்பம் உள்ளது. இக்குடும்பத்தில் உள்ளவர்களின் ரத்தத்தில் இயல்பிலேயே கபடி விளையாட்டு கலந்து உள்ளது.

இக்குடும்பத்தில் உள்ள ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கபடி விளையாடுவதில் ஆர்வமாக உள்ளனர். தற்போது, 15 கபடி வீரர்கள் உள்ளனர்.

இதில் சிலர் முழு நேர கபடி வீரராகவும், சிலர் பட்டதாரிகளாகவும், விவசாயம், கூலி வேலையும் செய்து வருகின்றனர். கபடி பயிற்சியை கூட விவசாய நிலத்திலே செய்து வருகின்றனர்.

இவர்கள் பாரம்பரியமாக கபடி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஊருக்கு சென்று துர்கி குடும்பம் என்று கேட்பதை விட, கபடி குடும்பம் என கேட்டால் சுலபமாக அவர்கள் வீட்டை அடையலாம். அந்த அளவிற்கு அவர்களின் புகழ் பரவி உள்ளது.

குடும்பம், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. இருப்பினும், கபடியின் மீதான ஆர்வமும், வெறியும் குறைந்தபாடில்லை.

இவர்கள், 'துர்கி பிரதர்ஸ்' எனும் பெயரில் கபடி அணியை வைத்துள்ளனர். தற்போது இந்த அணியில், குமார், பாலேஷ், கிரண், பிரவீன், ரன்வீர், சஞ்சு, அபிஷேக், சச்சின், பிரபா, கணேஷ், சைதன், விநாயக் ஆகியோர் முக்கிய ஆட்டக்காரர்களாக உள்ளனர். மேலும், சிலரும் உள்ளனர்.

இவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்களே இரண்டு அணிகளை உருவாக்க கூடிய எண்ணிக்கையில் இருந்தாலும், அவர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக ஒரே அணியில் விளையாடுகின்றனர்.

இவர்கள் மாநிலத்தில் எங்கு கபடி போட்டிகள் நடந்தாலும் சென்று கலந்து கொள்வதை வழக்கமாக வைத்து உள்ளனர். குறிப்பாக, மாவட்ட அளவில் நடந்த போட்டிகளில் கலந்து கொண்டு, பல பரிசுகளை வென்றுள்ளனர்.

இவர்கள் வென்றுள்ள கோப்பைகள், பதக்கங்கள் போன்றவற்றை தங்கள் வீடு முழுதும் அலங்கரித்து உள்ளனர். பெலகாவியில் துர்கி குடும்பத்தின் கபடி விளையாட்டை பார்ப்பதற்கே தனி ரசிகர் பட்டாளமே உள்ளதாம். இவர்களுக்கு பயிற்சி அளிப்பதும் இதே துர்கி குடும்பத்தை சேர்ந்த முன்னாள் கபடி வீரர்கள் தான் என்பது தனி சிறப்பு.


துர்கி குடும்பத்தை சேர்ந்த கபடி வீரர் சஞ்சு கூறுகையில், ''எங்கள் குடும்பத்தை சேர்ந்த அனைவரும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறோம். இதனால், தற்போது முழு மாநிலமும் எங்கள் குடும்பத்தை பற்றி பேசுகிறது. இதை கேட்க ஆனந்தமாக உள்ளது,'' என்றார்.

- நமது நிருபர் -

Advertisement