கடன் தொல்லை; இடுக்கியில் இரு குழந்தைகள் உள்பட 4 பேர் தற்கொலை

இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவின் உப்புதாரா பகுதியைச் சேர்ந்தவர் சஜீவ்,38. இவருக்கு ரேஷ்மா,28, என்ற மனைவியும் இரு குழந்தைகளும் உள்ளனர்.

கட்டப்பனா பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்திடம் ரூ.3 லட்சம் கடன் பெற்று, ஆட்டோ வாங்கி ஓட்டி தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். சுமார் 7 மாதங்கள் தவணைத் தொகையை முறையாக செலுத்தி வந்தார். ஆனால், கடந்த மாதம் நிதி நெருக்கடியால், அவரால் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் போனது.

இதையடுத்து, தனியார் நிதி நிறுவன ஊழியர்கள், தவணைத் தொகை கேட்டு, தொலைபேசியிலும், நேரிலும் வந்து தொல்லை கொடுத்துள்ளனர். மேலும், அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும் உள்ளனர்.

இதனால், மனமுடைந்து போன சஜீவ், தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் நேற்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து சஜீவின் தந்தை மோகனன் கூறுகையில், "வீட்டை விற்கு வேண்டுமானாலும் உங்கள் கடனை செலுத்தி விடுகிறோம் என்று கூறினோம். இந்த மாதம் 30 தேதி வரை அவகாசம் கேட்டோம். ஆனால், அதனை ஏற்றுக் கொள்ளாமல், தகாத வார்த்தைகளில் பேசியும், மிரட்டலும் விடுத்து வந்தனர்/," எனக் கூறினார்.

தற்கொலைக்கான காரணத்தை உறுதி செய்த போலீசார், சம்பந்தப்பட்ட தனியார் நிதி நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கப்பட்டு வருகிறது.

Advertisement