வயது வாரியாக மோசடி வலைவிரிப்பு சைபர் குற்றவாளிகள் குறித்து 'திடுக்'

பெங்களூரு: வயதுக்கு தக்கபடி மோசடி வலை விரித்து, மக்களிடம் சைபர் குற்றவாளிகள் பணம் பறிப்பதை சி.ஐ.டி., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

கர்நாடகாவில் சைபர் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரிக்கின்றன. வெளிநாட்டில் அமர்ந்து கொண்டு, இங்குள்ளவர்களை மோசடி வலையில் விழ வைத்து, லட்சக்கணக்கான ரூபாயை சைபர் குற்றவாளிகள் பறிக்கின்றனர்.

வங்கி அதிகாரிகள் போன்று நடித்து, பார்சலில் போதைப் பொருள் வந்ததாக மிரட்டுவது, ஆபாச வீடியோ வெளியிடுவதாக மிரட்டுவது, லாட்டரியில் பணம் விழுந்துள்ளது, பரிசு ஆசை காட்டுவது என, பல்வேறு விதங்களில் மக்களிடம் பணம் பறிக்கின்றனர்.

பாமர மக்களை விட, சைபர் குற்றவாளிகளின் பிடியில் சிக்குவோரில் படித்தவர்களே அதிகம் உள்ளனர். மக்களின் வயதுக்கு தகுந்தபடி வலை விரித்து, மக்களை சைபர் குற்றவாளிகள் ஏமாற்றுவது, சி.ஐ.டி., தரவுகளில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து, சி.ஐ.டி., - டி.ஜி.பி., சலீம் கூறியதாவது:

வயது வாரியாக சைபர் குற்றவாளிகள், மக்களுக்கு வலை விரிக்கின்றனர். 18 முதல் 20 வயது வரையிலான மாணவர்கள், இளைஞர்களுக்கு, 'உழைக்காமல் சமூக வலைதளங்கள் வழியாக அதிக பணம் சம்பாதிக்கலாம்' என, ஆசை காட்டுகின்றனர்.

இதற்காக, 'வெப்சைட் லிங்' அனுப்புகின்றனர். மொபைல் போனில் இதை 'கிளிக்' செய்ததும், இளைஞர்கள், மாணவர்களின் வங்கிக் கணக்கு உட்பட, தனிப்பட்ட தகவல்கள், சைபர் குற்றவாளிகளுக்கு சென்று விடுகின்றன. கண்ணிமைக்கும் நேரத்தில் பணத்தை தங்கள் கணக்குக்கு பரிமாற்றம் செய்து கொள்கின்றனர்.

அதேபோல், 30 முதல் 35 வயது வரையிலான நபர்களுக்கு அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். 'எந்த தொழிலில் முதலீடு செய்யலாம்?' என, தேடுவர். இத்தகைய நபர்களை சைபர் குற்றவாளிகள் குறிவைக்கின்றனர்.

'ஷேர் மார்கெட், அதிக வட்டி வழங்கும் நிறுவனங்கள், கிரிப்டோ கரன்சி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்தால், அதிகமான வட்டி, லாபம் கிடைக்கும்' என, ஆசை காட்டி, பொய்யான கம்பெனிகளின் விபரங்களை தருகின்றனர். இதை நம்பி பணம் முதலீடு செய்யும்போது, பண இழப்பு ஏற்படுகிறது.

மேலும், 50 முதல் 70 வயது வரையிலான மக்கள், தாங்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை வங்கியில் வைத்திருப்பர். இவர்களை கஸ்டம்ஸ் அதிகாரிகள் போன்று தொடர்பு கொள்ளும் சைபர் குற்றவாளிகள், 'உங்கள் பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது. உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருக்கிறோம். உங்களை கைது செய்ய கூடாது என்றால், நாங்கள் கூறும் கணக்கில் பணத்தை செலுத்த வேண்டும்' என, மிரட்டுகின்றனர்.

மானத்துக்கு பயந்து, மூத்த குடிமக்கள் வங்கியில் தங்களின் எதிர்காலத்துக்காக சேமித்து வைத்த பணத்தை, சைபர் குற்றவாளிகள் கூறிய கணக்கில் பரிமாற்றம் செய்கின்றனர்.

சைபர் குற்றவாளிகளின் பிடியில் சிக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, சைபர் குற்றங்களை கட்டுப்படுத்த, நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

அந்தந்த வயதினருக்கு தகுந்தபடி விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். மொபைல் போனில் அறிவிப்பு மூலம் எச்சரிக்கிறோம். அறிமுகம் இல்லாதவர்கள் மிரட்டினால் பணியாதீர்கள். உடனடியாக போலீசாருக்கு தகவல் தாருங்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement