கொட்டகையில் தீ விபத்து மாடு, கன்று குட்டி பலி

கொட்டகையில் தீ விபத்து மாடு, கன்று குட்டி பலி

கெலமங்கலம், கெலமங்கலம் அருகே, மாட்டு கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், சினையாக இருந்த கறவை மாடு மற்றும் கன்று குட்டி உயிரிழந்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே குட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பா, 53, விவசாயி; இவரது வீட்டின் அருகே மாட்டு கொட்டகை உள்ளது. நேற்று மதியம், 3:00 மணிக்கு கொட்டகையில் திடீரென தீப்பிடித்தது. அக்கம்பக்கத்தினர் உதவியுடன் முனியப்பா தீயை அணைக்க முயன்றார். முடியாததால், தேன்கனிக்கோட்டை தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால், கொட்டகையில் கட்டப்பட்டிருந்த சினையாக இருந்த ஒரு கறவை மாடு மற்றும் கன்று குட்டி தீயில் கருகி உயிரிழந்தது.
மாடுகளை தீயில் இருந்து காப்பாற்ற முயன்ற முனியப்பாவிற்கு தீக்காயம் ஏற்பட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கெலமங்கலம் போலீசார் விசாரணையில், மாட்டுக்கொட்டகை அருகே சென்ற உயர்மின் அழுத்த மின்கம்பிகள், அங்கிருந்த மரத்தின் மீது உரசியதால் தீப்பொறி ஏற்பட்டு, அது கொட்டகை அருகே இருந்த வைக்கோல் போர் மீது விழுந்து தீப்பிடித்து, கொட்டகைக்கு பரவியது தெரியவந்தது. தீ விபத்து ஏற்பட்ட நேரத்தில், மேலும் சில மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்ததால், அவை அதிர்ஷ்டவசமாக தப்பின.

Advertisement