ரூ.30 லட்சம் மோசடி அஞ்சலக முகவர் கைது

கடலுார் : ஓய்வு பெற்ற என்.எல்.சி.,ஊழியரிடம் ரூ. 30 லட்சம் மோசடி செய்த, அஞ்சலக முகவரை போலீசார் கைது செய்தனர்.

கடலுார் மாவட்டம், நெய்வேலி வட்டம் 18, என்.எஸ்.சி., போஸ் சாலையைச் சேர்ந்தவர் டேவிட்,60; ஓய்வு பெற்ற என்.எல்.சி., ஊழியரான இவர், தனது பணிக்கொடை தொகையை , அஞ்சலக வைப்பீட்டு கணக்கில் 5 ஆண்டு நிரந்தர வைப்புத் தொகையாக வைக்க திட்டமிட்டார்.

அதனை அறிந்த, நெய்வேலி இந்திரா நகர், என்.ஜே.வி.,நகரைச் சேர்ந்த அஞ்சலக முகவர் ராஜசேகரன்,55; என் மூலமாக பணம் செலுத்தினால் எனக்கு மாதாந்திர டார்கெட்டிற்கு உதவியாக இருக்கும். அதிலிருந்து எனக்கு கமிஷன் கிடைக்கும் எனக் கூறினார்.

அதனையேற்ற டேவிட், அவரது மனைவி கீதா ஆகியோர் கடந்த ஜூலை 5ம் தேதி, வட்டம் ௧௦ல் உள்ள தபால் நிலையில் இருந்த ராஜசேகரனிடம் ரூ.30 லட்சத்திற்கான காசோலையை கொடுத்தனர். அப்போது ராஜசேகரன், தலைமை அலுவலகம் சிதம்பரத்தில் இருப்பதால், புதிய புத்தகம் ஓபன் செய்ய 5 நாட்களாகும் எனக் கூறி அனுப்பி வைத்தார்.

ஆனால் 3 நாட்கள் கழித்து, ராஜசேகரன் பெயரில் அவரது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாக டேவிட்டிற்கு எஸ்.எம்.எஸ்.,சென்றது. இதுகுறித்து டேவிட், ராஜசேகரனிடம் கேட்டபோது, பணத்தை தராமல் மோசடி செய்தார்.

இதுகுறித்து டேவிட் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிந்து, ராஜசேகரனை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement