தமிழகத்தின் அமைதியை குலைக்க பார்க்கிறார் அமித் ஷா: ஸ்டாலின்

115

சென்னை: 'அமைதி மாநிலமான தமிழகத்தின் அமைதியை குலைக்க பார்க்கிறார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா' என, முதல்வர் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

அவரது அறிக்கை:

உள்துறை அமைச்சகத்தைக் கையில் வைத்திருக்கும் ஒரு அமைச்சர், 'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு' என்று, வாய்க்கு வந்தபடி பேசியிருப்பது கண்டனத்துக்குரியது.

இது மணிப்பூர் அல்ல; தமிழகம் என்பதை அமித் ஷாவுக்கு நினைவூட்டுகிறேன். ஒன்றரை ஆண்டுகளாக, 250 பேர் படுகொலை செய்யப்பட்ட மாநிலத்தை, பா.ஜ., ஆண்டது.

அங்கே போய் அமைதியை நிலைநாட்ட முடியாத உள்துறை அமைச்சர், அமைதியான மாநிலத்துக்குள் வந்து, அமைதியைக் குலைக்கப் பார்க்கிறார்.

அமைதியான மாநிலம் என்பதால் தான், அனைத்து வகையிலும் முன்னேறி வருகிறது தமிழகம். இதை மத்திய அரசின் புள்ளிவிபரங்களே ஒப்புக் கொள்கின்றன.

ஆனால், சட்டம் - ஒழுங்கு மோசம் என்று, உள்துறை அமைச்சர் பொறுப்பற்ற வகையில் பீதியை கிளப்பிச் சென்றிருக்கிறார்.

'நீட்' தேர்வு பற்றி, ஊடகவியலாளர்கள் திரும்பத் திரும்ப கேள்வி எழுப்பியபோது, அதற்கு சரியான பதிலை அமித்ஷாவால் சொல்ல முடியவில்லை.

'நீட் தேர்வு சரியானது' என்றாவது, தன் வாதத்தை அவர் வைத்திருக்க வேண்டும். மாறாக, 'நீட் தேர்வு எதிர்ப்பு என்பதே திசை திருப்புவது' என்ற, திசை திருப்பும் பதிலையே உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கிறார்.

இதுவரை, 20க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்திருக்கின்றனர். இவர்களும் திசை திருப்பும் வகையில்தான் தற்கொலை செய்து கொண்டனரா? இங்கு மட்டுமல்ல, பீஹாரிலும் மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதற்கு அமித் ஷா என்ன சொல்கிறார்?

ஐந்து மாநிலங்களில், நீட் தேர்வு முறைகேடுகள் தொடர்பாக, சி.பி.ஐ.. வழக்கு தாக்கல் செய்து விசாரணை நடத்தி வருவதும், மாணவர்கள் சிலரும், பெற்றோர் சிலரும் கைது செய்யப்பட்டு இருப்பதாவது, அமித் ஷாவுக்கு தெரியுமா?

சி.பி.ஐ., யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது; விசாரிக்கவும். அதன்பின், நீட் தேர்வு எதிர்ப்பு என்பது திசை திருப்புவதற்காக சொல்லப்படுகிறதா, மருத்துவக் கல்வியை காப்பதற்காகச் சொல்லப்படுகிறதா என்பதை அவர் அறிவார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement