வரும் 16ல்! அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போராட்டம் கண்டனம் தெரிவித்து களமிறங்குகிறது அ.தி.மு.க.,
சென்னை: பெண்களையும், ஹிந்து மதத்தையும் மிகவும் ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடிக்கு, அனைத்து தரப்பிலும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக்கோரி, ஏற்கனவே ஹிந்து அமைப்புகள் ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ள நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் களமிறங்குகிறது. வரும் 16ம் தேதி, சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை அக்கட்சி அறிவித்துள்ளது.
சென்னையில் உள்ள தி.மு.க., இளைஞரணி அலுவலகத்தில், கடந்த 6ம் தேதி, பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பொன்முடி பங்கேற்றார். விலைமாதுவுடன் சைவம், வைணவ சமயங்களை தொடர்புபடுத்தி, ஏட்டில் அச்சேற்ற முடியாத அளவுக்கு, மிகவும் அசிங்கமாக அவர் பேசினார்.
நீக்கம்
அவர் பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவியதும், பொன்முடிக்கு, அவர் சார்ந்த தி.மு.க., உட்பட அனைத்து கட்சிகளின் மகளிரணியினர், பெண்கள், ஹிந்து சமய ஆர்வலர்கள் என, பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையில், தி.மு.க., துணை பொதுச்செயலர் பதவியில் இருந்து பொன்முடி நேற்று முன்தினம் நீக்கப்பட்டார். ஆனால், தமிழக அமைச்சரவையில் தொடர்ந்து அவர் நீடிக்கிறார்.
அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதை, தி.மு.க., கண்டுகொள்ளாமல் இருப்பது, அக்கட்சி தொண்டர்களிடம், மகளிரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரத்தில் இருந்து சென்னை வந்த பொன்முடி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டுக்கு சென்று, முதல்வர் ஸ்டாலினை சந்தித்தார். பொன்முடி கொடுத்த விளக்கங்களை ஏற்காத ஸ்டாலின், அவரை எச்சரித்து அனுப்பியதாக தெரியவந்துள்ளது.
தொடர்ந்து, ஹிந்துக்களையும், பெண்களையும் அவமதிக்கும் வகையில் பேசி வரும் பொன்முடியை, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வலியுறுத்தி, விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில், நாளை மறுதினம் ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், மற்ற ஹிந்து அமைப்புகள் மட்டுமின்றி, பல்வேறு தரப்பினரும், சமூக ஆர்வலர்களும் போராட்டத்தை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், பொன்முடியை கண்டித்து, பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வும் போராட்டத்தில் குதிக்கிறது. 'பொன்முடியை அமைச்சரவையில் இருந்து நீக்க வலியுறுத்தி, வரும் 16ம் தேதி, சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
தமிழ் பண்பாட்டில் பெண்களுக்கு அளித்து வரும் மாண்பும், மகத்துவமும் அளவிட முடியாதவை. வியப்புக்குரிய படைப்பாய், தன்னையே முழுதுமாக அர்ப்பணித்து, உலகம் இயங்க உந்து சக்தியாய் வாழ்பவர்கள் பெண்கள்.
அறிவின் உருவாய், ஆற்றலின் வடிவமாய், தாய்மைக்கு இலக்கணமாய் திகழ்பவர்கள் பெண்கள். இத்தகைய போற்றுதலுக்கும், பெருமைக்கும் உரிய பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில், வனத் துறை அமைச்சர் பொன்முடி, சைவம் மற்றும் வைணவ சமயங்களின் குறியீடுகளை தொடர்புபடுத்தி, பெண்களை எவ்வளவு கொச்சையாக பேச முடியுமோ, அந்தளவுக்கு கொச்சைப்படுத்தி பேசியிருக்கிறார்.
வக்கிரத்தின் உச்சம்
ஒரு மனிதன் மனதில் இருக்கவே கூடாத குரூர வக்கிரத்தின் உச்சம், அவருடைய பேச்சில் வெளிப்பட்டு இருக்கிறது. தமிழகத்தின் அரசியல் மேடைகளில் நாகரிகத்தை முழுதுமாக அழித்து, அநாகரிகத்தை புகுத்தி வளர்த்த கட்சி என்றால், அது தி.மு.க., தான்.
அக்கட்சியின் பல பேச்சாளர்கள், அரசியல் தலைவர்களை மட்டுமின்றி, மிக மிக அநாகரிகமாக பெண்களையும், சமயங்களையும், பல்வேறு சமய நம்பிக்கை கொண்ட மக்களையும் தொடர்ச்சியாக கொச்சைப்படுத்தி, கேவலமாக பேசி வருகின்றனர்.
இதில், அந்த நாலாந்தர பேச்சாளர்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாமல், பொன்முடி வக்கிரத்தின் உச்சிக்கே சென்று பேசியிருக்கிற இந்த இழிவான கருத்துக்கள், தமிழக மக்களின், பெண்களின் நெஞ்சங்களில் நெருப்பை கொட்டி இருக்கிறது.
பொன்முடியின் இத்தகைய கீழ்த்தரமான பேச்சுக்கு கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
பொன்முடி, உயர் கல்வி துறை அமைச்சராக இருந்தவர். அவரது அநாகரிகமான பேச்சு, மக்களிடையே மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளித்துள்ளது.
அமைச்சர் பொன்முடியை கண்டித்து, தமிழகத்தில் இத்தகைய அநாகரிக அரசியலுக்கு இடமில்லை என்பதை உரக்கச் சொல்லுகிற வகையில், அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில், வரும் 16ம் தேதி காலை 10:00 மணிக்கு, சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடக்கும்.
இந்த ஆர்ப்பாட்டம், முன்னாள் அமைச்சர்கள் வளர்மதி தலைமையிலும், கோகுல இந்திரா முன்னிலையிலும் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
திட்டங்கள் கைகொடுக்காது!முதல்வர் ஸ்டாலின் செயல்படுத்திய இலவச பஸ் திட்டத்தால், தினமும் பல லட்சம் பெண்கள் பயன் அடைந்து வருகின்றனர். அதையே கிண்டலடித்து, 'எங்கே போக வேண்டுமானாலும், ஓசி பஸ்சில் போறீங்க' என்று பேசிய பொன்முடிக்கு, பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பல பெண்கள், 'உங்க அப்பன் காசிலா நாங்கள் ஓசியில் போகிறோம்' என, சகட்டுமேனிக்கு பொன்முடியை விமர்சித்து பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் பரவின. இதையடுத்து, கட்சி தலைமையின் கோபத்திற்கு ஆளான பொன்முடி, தன் பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார். தற்போது, பெண்களையும், ஹிந்து சமயங்களையும் மிகவும் ஆபாசமாக பொன்முடி பேசியுள்ளார். பெண்களுக்கு மாதம், 1,000 ரூபாய், இலவச பஸ் பயணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்திய போதிலும், பொன்முடியின் ஆபாச பேச்சுக்களால், பெண்களின் ஆதரவை தி.மு.க., இழக்கக் கூடும் என கூறப்படுகிறது. பொன்முடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடையாமல் இருக்க, அமைச்சர் பதவியில் இருந்து அவரை நீக்குவது தான் ஒரே வழி என, ஆட்சியாளர்களுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.
மேலும்
-
மும்பை அணி 'திரில்' வெற்றி: டில்லி அணிக்கு முதல் தோல்வி
-
நுாறாவது அரைசதம் விளாசினார் கோலி: பெங்களூரு அணி வெற்றி
-
எழுச்சி பெறுமா சென்னை அணி: லக்னோ அணியுடன் மோதல்
-
கோப்பை வென்றார் அல்காரஸ்: மான்டி கார்லோ டென்னிசில்
-
ஜெர்மனி நீச்சல் வீரர் சாதனை: 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில்
-
வில்வித்தை: ஜோதி-ரிஷாப் 'தங்கம்'