135 நகரங்களுக்கான 'மாஸ்டர் பிளான்' உருவாக்கம் 'கிரெடாய்' விழாவில் டி.டி.சி.பி., இயக்குநர் தகவல்

சென்னை: ''தமிழகத்தில், 135 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்காக உருவாக்கப்படும் 'மாஸ்டர் பிளான்'களால், அடிப்படை வசதிகளில் பெரிய மாற்றம் ஏற்படும்,'' என, தமிழக நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குநர் கணேசன் கூறினார்.

இந்திய ரியல் எஸ்டேட் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'கிரெடாய்' அமைப்பின் தமிழக பிரிவுக்கு, 2025 - -27 ஆண்டு காலத்துக்கான புதிய நிர்வாகிகள், சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டனர்.

கிரெடாய் தமிழக பிரிவு புதிய தலைவராக ஹபீப், துணைத் தலைவராக கோபிநாத், செயலராக ஸ்ரீகுமார், இணைச் செயலராக சதாசிவம், பொருளாளராக ஜெய்பிரகாஷ் ஆகியோர் நேற்று, பொறுப்பேற்றனர். அவர்களுக்கு, அமைச்சர் சேகர்பாபு வாழ்த்து தெரிவித்தார்.

மேலும், கிரெடாய் தேசிய செயலர் சுரேஷ்கிருஷ்ணா, முன்னாள் தலைவர் இளங்கோவன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்து, கிரெடாய் செயல்பாடுகள் குறித்து விரிவாக பேசினர்.

டி.டி.சி.பி., எனப்படும் தமிழக நகர் மற்றும் ஊரமைப்பு துறை இயக்குநர் பா.கணேசன் பேசியதாவது:

தமிழகத்தில், 135 நகரங்கள் மற்றும் சிறுநகரங்களுக்காக தயாரிக்கப்படும் முழுமை திட்டமான, 'மாஸ்டர் பிளான்' அடிப்படை வசதிகளுக்கான மாற்றமாக இருக்கும். இது எதிர்காலத்திற்கான திட்டமிடல் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான அடித்தளமாகவும் இருக்கும்.

சென்னை மட்டும் இன்றி, இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களை மேம்படுத்தும் வகையிலும், முழுமை திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது. கோவை, மதுரை ஆகிய நகரங்களுக்கான மாஸ்டர் பிளான் தயாரிக்கும் பணிகள், இறுதி கட்டத்தை எட்டி உள்ளன.

இவ்வாறு அவர் பேசினார்.

'கிரெடாய்' அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் ஹபீப் பேசியதாவது:

இந்தியாவில் வேகமாக நகரமயமாகும் மாநிலங்களில் தமிழகம் முன்னணியாக இருக்கிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் சிறு நகரங்களில், விரைவில் மாஸ்டர் பிளான்களை செயல்படுத்தும் திட்டம் வரவேற்கதக்கது.

இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement