காங்கேயம் அருகே லாரிகளுக்கு இடையில் கார் சிக்கியது; கோவை பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

காங்கேயம்: காங்கேயம் அருகே, இரு லாரிகளுக்கு இடையே கார் சிக்கிய விபத்தில் கோவை தனியார் பள்ளி ஆசிரியை உயிரிழந்தார்.



இதுபற்றிய விவரம் வருமாறு;


கோவை மாவட்டம், சின்னியம்பாளையம் அருகே உள்ள கரையான்பாளையம் பகுதியைச் சேர்ந்த தியாகராஜன்,65. இவரது மனைவி மரகதம்,57. தனியார் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.


இவர்களது மகன் நவீன்,35, சென்னையில் உள்ள தனியார் ஐ.டி., நிறுவனத்தில் இன்ஜினியராக பணிபுரிந்து வருகிறார். மருமகள் அனிதா,31, மற்றும் சுதன்,3. இவர்கள் 5 பேரும் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, காடையூர் அருகே உள்ள கோவிலுக்கு சாமி கும்பிட தங்களது காரில் மதியம் 2:00 மணி அளவில் வந்துள்ளனர். காரை நவீன் ஒட்டியுள்ளார்.


கோவை கரூர் தேசிய நெடுஞ்சாலை காங்கேயம் அருகே காடையூர் பகுதியில் செல்லும் போது, தவிட்டுமில் அருகே ரோட்டு ஓரம் நின்று கொண்டிருந்த லாரியின் பக்கவாட்டில் லேசாக கார் மோதியது. இதில் கார் நிலைதடுமாறியது. பின்னால் வந்த ஒரு லாரி மீது மோதிய போது மீண்டும் மற்றொரு லாரி மீது மோதி, இடையில் கார் சிக்கியது. இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியது.


விபத்தில் ஐந்து பேரும் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்களால் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு காங்கேயம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சேர்த்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், மரகதம் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.


காயமடைந்த நவினுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தியாகராஜன், அனிதா, சுதன் ஆகிய மூவரும் மேல் கிசிக்கைச்சாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து காங்கேயம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் 30 நிமிடம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Advertisement