வாய்ப்புக்காக காத்திருந்தேன்: சொல்கிறார் கருண் நாயர்

புதுடில்லி: ''பிரிமியர் லீக் போட்டியில் எனக்கான வாய்ப்புக்காக காத்திருந்தேன்,'' என, கருண் நாயர் தெரிவித்தார்.
டில்லியில் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் மும்பை அணி (205/5), 12 ரன் வித்தியாசத்தில் டில்லி அணியை (193/10) வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்தது.

இப்போட்டியில் டில்லி அணி சார்பில் 'இம்பாக்ட்' வீரராக 3வது இடத்தில் களமிறங்கிய கருண் நாயர், 40 பந்தில், 5 சிக்சர், 12 பவுண்டரி உட்பட 89 ரன் விளாசினார்.
பிரிமியர் லீக் அரங்கில் கடைசியாக 2022ல் ராஜஸ்தானுக்காக விளையாடிய கருண் நாயர், உள்ளூர் போட்டியில் விதர்பா அணிக்காக மூன்று வித போட்டிகளிலும் ரன் மழை (1870 ரன்) பொழிந்தார். இம்முறை வீரர்கள் ஏலத்தில் டில்லி அணியில் ரூ. 50 லட்சத்திற்கு ஒப்பந்தமானார்.

டில்லி அணி விளையாடிய முதல் நான்கு போட்டியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. மும்பைக்கு எதிரான போட்டியில் டுபிளசி காயமடைந்ததால், 'இம்பாக்ட்' வீரராக களமிறங்கினார் கருண்.
இதுகுறித்து கருண் கூறுகையில், ''ஏற்கனவே பிரிமியர் லீக் தொடரில் விளையாடி இருந்ததால் 'லெவன்' அணியில் இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருந்தேன். எனக்கான வாய்ப்பு கிடைக்கும் வரை பொறுமையுடன் காத்திருக்க முடிவு செய்தேன். எந்த போட்டியிலும் களமிறங்க மனதளவில் என்னை தயார் படுத்திக் கொண்டேன். டுபிளசி போன்ற முன்னணி வீரர்கள் காயத்தால் விளையாட முடியாத நிலையில், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிறப்பாக விளையாடியது மகிழ்ச்சி. திறமையான வீரர்கள் நிறைய இருப்பதால் 'லெவன்' அணியை தேர்வு செய்வது கடினம்,'' என்றார்.

Advertisement