குஜராத்தில் ரூ.1,800 கோடி மதிப்புள்ள 300 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஆமதாபாத்: குஜராத்தில் கடல்வழியாக கடத்தப்படவிருந்த, 1,800 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருளை, பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் நேற்று பறிமுதல் செய்தனர்.

குஜராத் கடற்பகுதி வழியாக சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் நடப்பதாக கடலோர காவல்படைக்கு உளவுத் துறை தகவல் அளித்தது.

பிடிக்க முடியவில்லை



இதையடுத்து, குஜராத்தின் பயங்கரவாத எதிர்ப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து, சர்வதேச கடல் எல்லை பகுதியில் கடலோர காவல் படையினர் ஏப்., 12 மற்றும் 13ம் தேதிகளில் சோதனை நடத்தினர்.

அப்போது படகு ஒன்று சந்தேகத்துக்கிடமான வகையில் சென்றதை அடுத்து, அதை கடலோர காவல்படையினர் துரத்திச் சென்றனர்.

படகில் இருந்த மர்ம நபர்கள், தங்களிடம் இருந்த போதைப் பொருட்களை கடலில் வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இந்திய கடல் எல்லையை அவர்கள் தாண்டியதை அடுத்து, அவர்களை பிடிக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது.

இதையடுத்து, கடலில் வீசப்பட்ட போதைப் பொருட்கள் பல மணிநேரப் போராட்டத்துக்கு பின், நேற்று அதிகாலை மீட்கப்பட்டன. அவை, 'மெத்ஆம்பெட்டமைன்' வகையைச் சேர்ந்த போதைப் பொருள் என்றும், 300 கிலோ வரை உள்ள அதன் மதிப்பு, 1,800 கோடி ரூபாய் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள், கடற்படைக்கு சொந்தமான கப்பல் வாயிலாக போர்பந்தருக்கு கொண்டுவரப்பட்டன.

13 முறை முறியடிப்பு



போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளில், இது போல் 13 முறை போதைப்பொருள் கடத்தல் முறியடிக்கப்பட்டுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தன் சமூக வலைதள பதிவில், 'குஜராத் கடற்பகுதியில் போதைப்பொருள் கடத்தலை முறியடித்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள். போதைப்பொருள் இல்லாத பாரதத்தை உருவாக்கும் இடைவிடாத முயற்சிக்கான சாதனை இது' என தெரிவித்துள்ளார்.

Advertisement