தோனிக்கு 'உதவினாரா' ரிஷாப் பன்ட்... * பிஷ்னோய்க்கு வாய்ப்பு மறுத்தது ஏன்

லக்னோ: நட்சத்திர 'ஸ்பின்னர்' பிஷ்னோய்க்கு, கடைசி கட்டத்தில் பந்துவீச வாய்ப்பு அளிக்காமல் தவறு செய்தார் லக்னோ கேப்டன் ரிஷாப் பன்ட். இதை பயன்படுத்திய தோனி, சென்னை அணிக்கு வெற்றி தேடித் தந்தார். ரிஷாப் செயல், பிரிமியர் தொடரின் நம்பகத்தன்மையை கேள்வி எழுப்பியுள்ளது.
லக்னோவில் நேற்று முன் தினம் நடந்த பிரிமியர் லீக் போட்டியில் லக்னோ அணியை (20 ஓவர், 166/7), சென்னை (19.3 ஓவர், 168/5) வென்றது. இதில் லக்னோ 'ஸ்பின்னர்' பிஷ்னோய் அசத்தினார். 3 ஓவரில் 18 ரன் கொடுத்து இரு விக்கெட் (திரிபாதி, ஜடேஜா) வீழ்த்தினார். 9 'டாட் பால்' வீசினார். இவரிடம் ஒரு ஓவர் மீதமிருந்தது.
'சுழல்' தடுமாற்றம்
சென்னை அணி 15 ஓவரில் 111/5 ரன் எடுத்திருந்தது. வெற்றிக்கு கடைசி 30 பந்தில் 56 ரன் தேவைப்பட்ட நிலையில், கேப்டன் தோனி வந்தார். இவருக்கு எதிராக இம்முறை 'ஸ்பின்னர்'களையே எதிரணி கேப்டன்கள் பயன்படுத்தினர். ராஜஸ்தான் கேப்டன் சாம்சன், 18வது ஓவரை தீக் ஷனாவுக்கு கொடுத்தார். அவர், 6 ரன் மட்டுமே வழங்கினார். டில்லி கேப்டன் அக்சர் படேல், 17வது ஓவரை வீசி, 5 ரன் கொடுத்தார். பஞ்சாப் உடனான போட்டியில் கேப்டன் ஷ்ரேயஸ் 17வது ஓவரை வீச சஹாலை அழைத்தார். சஹால் 9 ரன் கொடுத்தார். 'ஸ்பின்னர்'களுக்கு எதிரான இந்த ஓவர்களில் தோனி ஒரு பவுண்டரி கூட அடிக்கவில்லை. பிரிமியர் அரங்கில் 2020ல் இருந்து 'ஸ்பின்னர்'களுக்கு எதிராக இவரது 'ஸ்டிரைக் ரேட்' 94.23 தான். இப்போட்டிக்கு முன், இந்த சீசனில் 'ஸ்பின்னர்'களின் 34 பந்தில் 34 ரன் எடுத்தார். இதில் 15 'டாட் பால்' அடங்கும். அதே நேரத்தில் 'வேகங்களின்' 37 பந்தில் 70 ரன் எடுத்தார்.
எடுபடாத 'வேகம்'
தோனியின் பலவீனத்தை உணராத ரிஷாப், தொடர்ந்து 'வேகங்களுக்கு' (16-20 ஓவர்) வாய்ப்பு அளித்து தவறு செய்தார். அவேஷ் கான் ஓவரில் (16), தோனி இரு பவுண்டரி அடித்தார். 17வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர் பந்தில் சிக்சர் அடித்தார். அவேஷ் வீசிய 18வது ஓவரிலும் ஒரு பவுண்டரி அடித்தார். முக்கியமான 19வது ஓவரை பிஷ்னோய்க்கு கொடுத்திருந்தால், திருப்புமுனை ஏற்படுத்தியிருப்பார். ஆனால் ஷர்துல் தாகூரிடம் பந்தை கொடுத்தார் ரிஷாப். இந்த ஓவரில் 7 'நோ-பால்', 'வைடு', தோனி ஒரு பவுண்டரி அடிக்க (மொத்தம் 19 ரன்), லக்னோ கதை முடிந்தது. கடைசி ஓவரில் 5 ரன் தான் தேவை. அவேஷ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய துபே (43*), சென்னை வெற்றியை உறுதி செய்தார். தோனி 11 பந்தில் 26 ரன்* (4x4, 1x6) எடுத்தார். இம்முறை 'வேகங்களுக்கு' எதிரான தனது ஸ்கோரை இரு மடங்காக (48 பந்தில் 96 ரன்) உயர்த்தினார்.
மழுப்பலாக பதில் அளித்த ரிஷாப் கூறுகையில், ''பிஷ்னோயை பந்துவீச (அவரது 4வது ஓவர்) அழைப்பது பற்றி பல முறை சிந்தித்தேன். ஆனாலும் வாய்ப்பு கொடுக்க முடியவில்லை. வரும் போட்டிகளில் முன்னேற்றம் காண்போம்,'என்றார்.
கேப்டன் முடிவு
பிஷ்னோய் கூறுகையில்,'' கடைசி கட்டத்தில், எனது தேவை இருக்கிறதா என்பதை அறிய, ஆடுகளத்தின் அருகே இரு முறை சென்றேன். கேப்டன் ரிஷாப் மனதில் வேறு திட்டங்கள் இருந்திருக்கலாம். விக்கெட் கீப்பராகவும் இருப்பதால், ஆட்டத்தின் போக்கை அவரால் நன்கு புரிந்து கொள்ள முடியும். அவருக்கு சிறந்தது என தோன்றிய முடிவை எடுத்துள்ளார்,''என்றார்.

சேப்பாக்கம் ஆடுகளம் சரியில்லை
கேப்டன் தோனி கூறுகையில்,''சேப்பாக்கத்தில் சென்னை அணி தடுமாறியதற்கு மந்தமான ஆடுகளம் ஒரு காரணம். சென்னைக்கு வெளியே நடக்கும் போட்டிகளில் எங்களது பேட்டிங் நன்றாக உள்ளது. சேப்பாக்கம் ஆடுகளம் இன்னும் சிறப்பாக அமைக்கப்பட்டால், பேட்டர்கள் தன்னம்பிக்கையுடன் 'ஷாட்' அடிக்க முடியும். பயந்து விளையாட யாருக்கும் பிடிக்காது. 'பவர்பிளே'யில் இரு ஓவர் வீசச் சொல்லி அஷ்வினுக்கு அதிக அழுத்தம் கொடுத்தோம். இதனால் சில மாற்றங்களை செய்தோம். தற்போது பவுலிங் பிரிவு சிறப்பாக உள்ளது.
இளம் ஷேக் ரஷீத் தனது அசத்தல் ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். நுார் அகமது சிறப்பாக பந்துவீசிய நிலையில், எனக்கு எதற்காக ஆட்ட நாயகன் விருது கொடுத்தார்கள் என தெரியவில்லை (ஜாலியாக). லக்னோவுக்கு எதிரான வெற்றி, அணியின் தன்னம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது,''என்றார்.

காலில் காயமா
லக்னோவுக்கு எதிரான போட்டி முடிந்து ஓட்டலுக்கு திரும்பிய போது, கேப்டன் தோனி 43, நடக்கவே சிரமப்பட்டார். இவரது காலில் காயம் ஏற்பட்டுள்ளதா என தெரியவில்லை. 2023ல் இடது முழங்காலில் 'ஆப்பரேஷன்' செய்த பின் அதிகமாக 'சிங்கிள்' ரன்னுக்கு ஓடுவதில்லை. சிக்சர், பவுண்டரிகளில் ரன் சேர்ப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.

புரியாத புதிர்
வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரர் இயான் பிஷப் கூறுகையில்,''இடது கை பேட்டர் ஷிவம் துபே விளாசுவார் என நினைத்திருக்கலாம். ஆனால், பிஷ்னோய் பந்துவீச்சில் ஏற்கனவே துபே தடுமாறினார். கடைசி கட்டத்தில் பிஷ்னோய்க்கு ரிஷாப் பந்துவீச வாய்ப்பு அளிக்காதது புரியாத புதிராக இருந்தது,''என்றார்.

Advertisement