2 ஆண்டாக சமூக நலக்கூடத்திற்கு மின் சேவை வழங்கப்படவில்லை அ.தி.மு.க., கவுன்சிலர் குற்றச்சாட்டு
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில், நேற்று நடந்தது. இதில் பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில், 14வது வார்டில் 2.50 கோடி ரூபாய் செலவில் சமூக நலக்கூடம் கட்டும் பணி உட்பட, 96 தீர்மானங்கள் நிறைவேறின. நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வார்டின் அடிப்படை பிரச்னை குறித்து, கவுன்சிலர்கள் பங்கேற்று பேசினர். பெரும்பாலான கவுன்சிலர்கள் மின்சார பிரச்னை குறித்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.
கார்த்திக், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்:
தெருவிளக்கு அமைக்க, டிசம்பர் மாதம் பூஜை போடப்பட்டது. நான்கு மாதங்களாகியும், வெறும் கம்பங்கள் மட்டுமே உள்ளன. விளக்குகள் பொருத்தப்படவில்லை. மின்துறையில் பல பிரச்னைகள் உள்ளன.
இரு பூங்கா மற்றும் சமுதாய நலக்கூடத்திற்கு, இரண்டு ஆண்டுகளாகியும் மின்சேவை வழங்கப்படவில்லை. வார்டு முழுதும், கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. சாத்தாங்காடு காவல் துறை, துாங்கி வழிகிறது. ஆய்வாளர் கண்டுக்கொள்வதில்லை.
ஜெயராமன், 4வது வார்டு மார்க்.கம்யூ., கவுன்சிலர்:
விபத்தை தவிர்க்கும் பொருட்டு, மணலி விரைவு சாலையில், சத்தியமூர்த்தி நகர், ஜோதி நகர், முருகப்பா நகர் ஆகிய மூன்று இடங்களில், ரவுண்டானா அமைக்க வேண்டும்.
ஜெய்ஹிந்த் நகர் மின்மாற்றி மற்றும் நான்கு மின் கம்பங்களை மாற்றி தர வேண்டும் என, பல மாதங்களாக கோரி வருகிறேன். சக்தி கன்ஸ்ட்ரக் ஷன், மழைநீர் வடிகால் பணியை சரிவர மேற்கொள்ளவில்லை. தினமும் அவர்களோடு பெரும் போராட்டமாகவே இருக்கிறது.
சாமுவேல் திரவியம், 6வது வார்டு காங்., கவுன்சிலர்:
கவுன்சிலர்கள், பத்து கோரிக்கை விடுத்தால், ஒன்றை கூட அதிகாரிகள் மேற்கொள்வதில்லை. மூன்று ஆண்டுகளாக இதே நிலை தான். மக்கள் தொகை பெருகி வரும் நிலையில், அதற்கேற்ப மின்மாற்றி வைத்து சமாளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்சார பிரச்னை பெரும் தலைவலியாக உள்ளது. போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் அம்பேத்கர் நகர் சுரங்கப்பாதையில், நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை.
தனியரசு, தி.மு.க., மண்டல குழு தலைவர்
கோடை வெயிலால் 'ஏசி' பயன்பாடு அதிகரித்துள்ளது. அதிக மின் நுகர்வு காரணமாக, மின்சேவையில் பாதிப்பிருந்தாலும், மின்வெட்டு கிடையாது. அதை அதிகாரிகள், உடனுக்குடன் சரி செய்து விடுகின்றனர்.
விஜய்பாபு, மண்டல உதவி கமிஷனர்
வெயில் அதிகரிப்பதால், மின்சாரம் மற்றும் குடிநீர் வாரியம் ஆள்பற்றாக்குறையை சரிசெய்து, நிலைமையை சமாளிக்க தயாராக இருக்க வேண்டும். தேர்தல் பணிக்கு முன்னதாக, வார்டு பிரச்னைகளை முடிக்க வேண்டும்.
ஏழாவது வார்டில், தெருவிளக்குகள், 15 நாட்களில் முடிக்க வேண்டும். மண்டல கூட்டத்திற்கு காவல் துறையும், நிச்சயம் வர வேண்டும்.
மேலும்
-
வக்ப் திருத்த சட்டத்திற்கு முழு ஆதரவு: தமிழ் மாநில முஸ்லீம் லீக் அறிவிப்பு
-
யா.புதுப்பட்டி தொழுநோய் மையத்தில் வசதிகள் நிறைவேற்ற வழக்கு அறிக்கை கோரும் உயர்நீதிமன்றம்
-
கீழக்கரையில் போதை சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் இலங்கை இம்ரான்
-
அமைச்சர் பொன்முடி பகிரங்க மன்னிப்பு கேட்கும் வரை போராட்டம்: வி.எச்.பி.,
-
பொது இடத்தில் தகராறு வாலிபர் கைது
-
மதுரையில் ஏப்.26 முதல் கிராமிய ஒலிம்பிக் போட்டி