ஆவடி முதிய தம்பதி கொலை வழக்கு ஆந்திர வாலிபருக்கு 'இரட்டை ஆயுள்'

பூந்தமல்லி, ஆவடி, சேக்காடு பகுதியில் உள்ள பண்ணை வீட்டில், ஜெகதீசன், 62, - விசாலினி, 58, தம்பதி வசித்து வந்தனர். இருவரும், ஓய்வுபெற்ற அரசு அச்சக ஊழியர்கள்.

இவர்களது மகன்கள் வெளிநாட்டில் உள்ளதால், தம்பதியர் இருவரும் மட்டும் தனியே பண்ணை வீட்டில் வசித்து வந்தனர்.

இந்நிலையில், ஆந்திராவில் இருந்து கைக்குழந்தையுடன் வேலை தேடி வந்த சுரேஷ்குமார், 38, - பூவலட்சுமி, 29, தம்பதி, பண்ணை வீட்டிற்கு வந்து வேலை கேட்டனர்.

அவர்கள் மீது இரக்கப்பட்ட ஜெகதீசன், அவர்களுக்கு வீட்டு வேலை கொடுத்ததுடன், பண்ணை வீட்டிலேயே தங்குவதற்கும் இடம் கொடுத்தார்.

கடந்த 2018ம் ஆண்டு, நவம்பர் மாதம், ஜெகதீசன் - விசாலினி தம்பதியை இரும்பு ராடால் அடித்து கொலை செய்துவிட்டு, நகை, பணத்தை கொள்ளையடித்து, சுரேஷ்குமாரும், பூவலட்சுமியும் தப்பினர்.

ஆவடி போலீசார் விசாரணையில், சுரேஷ்குமார் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிந்தது.

இதையடுத்து, வடமாநிலத்தில் தலைமறைவாகி பதுங்கி இருந்த சுரேஷ்குமார், பூவலட்சுமியை, ஆவடி போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு விசாரணை, பூந்தமல்லியில் உள்ள கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் - 3ல் நடந்து வந்தது.

இதற்கிடையே, சிறையில் இருந்த பூவலட்சுமி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். அதனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

சுரேஷ்குமார் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 30,000 ரூபாய் அபராதமும் விதித்து, நேற்று நீதிபதி பாலகிருஷ்ணன் தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, சுரேஷ்குமார் சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement