திருட்டு வழக்கில் குற்றவாளிகள் கைது போலீசாரை பாராட்டிய கமிஷனர்

சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த மாதம், 28 ம் தேதி, சென்னை சூப்பர் கிங்ஸ் - பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகளுக்கு இடையே, ஐ.பி.எல்.,போட்டி நடந்தது.

இதில், 34,000 ரசிகர்கள் மைதானத்தில் அமர்ந்து போட்டியை பார்த்து ரசித்தனர். போட்டி முடிந்து வெளியேறியபோது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி, 20க்கும் மேற்பட்டவர்களிடம், மர்ம நபர்கள் மொபைல் போனை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து, திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆய்வாளர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி, ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த, ராஜ்குமார், 22, ஆகாஷ் நோநியா, 23, விஷால் குமார் மாட்டோ, 22 கோபிந்த்குமார், 21 உட்பட, 17 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 71 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறப்பாக செயல்பட்டு மொபைல் திருட்டு கும்பலை கைது செய்த, திருவல்லிக்கேணி ஆய்வாளர் பிரகாஷ் உட்பட, தனிப்படையினர் 13 பேரை நேற்று, கமிஷனர் அருண் அழைத்து, வெகுமதி வழங்கி பாராட்டினார்.

அதேபோல், போதைப் பொருள் வழக்கில், ஏழு நைஜீரியர்கள் உட்பட, 17 பேர் கைது செய்த, தனிப்படை போலீசாரையும் அழைத்து, கமிஷனர் அருண் வெகுமதி அளித்து பாராட்டினார்.

Advertisement