விவசாயிகளுக்கான அக்ரி ஸ்டேக் பதிவு காலஅவகாசம் நீட்டிக்கப்படுமா
திண்டுக்கல்:விவசாயிகளுக்கான அக்ரி ஸ்டேக் திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்ய நேற்று (ஏப்.,15) வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் மீண்டும் நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்தியாவில் உள்ள அனைத்து விவசாயிகள் குறித்த தகவல்களை சேகரித்து டிஜிட்டல் மயமாக்கும் 'அக்ரி ஸ்டேக்' திட்டத்தின்படி ஆதார் போல் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு தனி குறியீட்டு எண் வழங்கப்படவுள்ளது.
இப்பணி பிப்ரவரில் தொடங்கப்பட்டது. மார்ச் 31ம் தேதிக்குள் இந்த பதிவேற்றம் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. சம்மந்தப்பட்ட விவசாயிகள் தங்கள் பகுதியிலுள்ள அரசு பொது இ- சேவை மையங்களில் அக்ரிஸ்டேக்கில் பதிவு செய்வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அதிகளவில் பதிவு நடக்கவில்லை என்பதாலும் நேற்று (ஏப்., 15) வரை காலஅவகாசம் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் 25 சதவீதம் விவசாயிகள் இன்னும் பதிவு செய்யவில்லை.
அவர்கள் பதிவு செய்ய காலஅவகாசத்தை மீண்டும் நீட்டிக்க வேண்டும் என எதிர்பார்த்துள்ளனர்.
வேளாண்துறை அதிகாரிகள் கூறியதாவது: மாநிலம் முழுவதும் அக்ரி ஸ்டேக் பதிவுக்கான காலஅவகாசம் மீண்டும் நீட்டிப்பு செய்ய இதுவரை அறிவிப்பு வரவில்லை என்றாலும் பதிவுப்பணிகள் தொடர்ந்து நடக்கிறது.
எனவே விவசாயிகள் பதிவேற்றம் செய்வதில் எந்தவித சிக்கலும் இருக்காது என்றனர்.