கேரளாவில் யானை தாக்கி பழங்குடியினர் இருவர் பலி

திருச்சூர் : கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள வழச்சல் பகுதியை சேர்ந்த பழங்குடியினர் சிலர், அதிரப்பள்ளி அருவியையொட்டிய வனப்பகுதி பாறையில் குடிசை அமைத்து தங்கியிருந்தனர்.

தேன் உள்ளிட்ட பொருட்களை சேகரிப்பதற்காக தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அங்கு வந்த யானைகள் கூட்டம் திடீரென அவர்களை தாக்கியது. இதில் அம்பிகா, 37, சதீஷ், 30, ஆகிய இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

குடிசைகளில் தங்கியிருந்த மேலும் சில பழங்குடியினர் தப்பியோடி வனப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

தகவலறிந்த போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் அம்பிகா, சதீஷ் ஆகிய இருவரது உடல்கள் மீட்கப்பட்டன. முன்னதாக, கடந்த 13ம் தேதி, இதே பகுதியில், பழங்குடியினத்தைச் சேர்ந்த செபாஸ்டின் என்பவர் யானை தாக்கி பலியானார். இதன் வாயிலாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் யானை தாக்குதலுக்கு இந்த பகுதியில் மூவர் பலியாகியுள்ளனர்.

இந்த தொடர் தாக்குதல் சம்பவங்களை அடுத்து, அதிரப்பள்ளி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள், யானைகளிடம் இருந்து தங்களை பாதுகாக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அதிகாரிகள் பேச்சு நடத்தி வருகின்றனர்.

Advertisement