பைக்குகள் மோதி விபத்து வாலிபர் பரிதாப பலி
திருக்கோவிலுார் : மணலுார்பேட்டை அருகே 2 பைக்குகள் மோதிக் கொண்ட விபத்தில் வாலிபர் இறந்தார்.
திருக்கோவிலுார் அடுத்த டி.எடப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாபு மகன் ஆரிப், 26; நேற்று முன்தினம் இரவு 7:30 மணியளவில் சிறுபனையூர் தக்கா கிராமத்தில் நடந்த உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்று பல்சர் பைக்கில் ஊர் திரும்பினார்.
பிள்ளையார்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் சூர்யா, 25; இவர், ஹீரோ ஹோண்டா ஸ்பிளெண்டர் பைக்கில் தியாகதுருகம் நோக்கிச் சென்றார்.
ஜா.சித்தாமூர் அருகே சூர்யா ஓட்டிச் சென்ற பைக் சாலையில் குறுக்கே பாம்பு சென்றதால் அதன் மீது ஏற்றியதும், நிலை தடுமாறி எதிரில் வந்த ஆரிப் பைக் மீது மோதினார்.
உடன், அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்த ஆரிப்பை மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார்.
காயமடைந்த சூர்யா திருக்கோவிலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.