சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்

4

புதுடில்லி :சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்குப்பதிவு செய்த உ.பி., போலீசாருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
உத்தர பிரதேசத்தில் சொத்து பிரச்னை, செக் மோசடி போன்ற சிவில் விவகாரங்களுக்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளன.

அதில், கான்பூரைச் சேர்ந்த ஷில்பி குப்தா தொடர்ந்த வழக்கும் ஒன்று. அவர், ரிகாப் பிரானி, சாதனா பிரானி ஆகியோருக்கு சொந்தமான கிடங்கை 1.35 கோடி ரூபாய்க்கு விலை பேசி, முன்பணமாக 19 லட்சம் ரூபாய் கொடுத்திருந்தார்.

ஆனால், மீதி பணத்தை அளிக்க காலதாமதம் ஆனதால், வேறு ஒருவருக்கு அந்த கிடங்கை ரிகாப், சாதனா விற்றனர். ஷில்பி குப்தா கொடுத்த 19 லட்சம் ரூபாயை திருப்பி தரவில்லை.

இதையடுத்து, ஷில்பி அளித்த புகாரின்பேரில், இருவர் மீதும் உ.பி., போலீசார் கிரிமினல் வழக்குப்பதிவு செய்தனர். சிவில் விவகாரத்தில், கிரிமினல் வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுத்ததால், ரிகாப் பிரானி, சாதனா பிரானி இருவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, நீதிபதி சஞ்சய் குமார் அமர்வு நேற்று பிறப்பித்த உத்தரவில், 'சிவில் விவகாரங்களில் கிரிமினல் வழக்கு பதிவு செய்வதை ஏற்க முடியாது. கிரிமினல் வழக்கு பதிவு செய்யுமாறு ஷில்பி தாக்கல் செய்த மனுக்களை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இரண்டு முறை தள்ளுபடி செய்துள்ளது.

'எனினும், கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இதற்கு காரணமான உ.பி., போலீசாருக்கு, 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது' என தெரிவித்தனர்.

ஏற்கனவே, உ.பி.,யின் நொய்டாவைச் சேர்ந்த ஒருவர் மீது செக் மோசடி தொடர்பான புகாரில் கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்ட விவகாரத்தை விசாரித்த உச்ச நீதிமன்றம், 'உத்தர பிரதேசத்தில் சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்துள்ளது.

'ஒரு சிவில் வழக்கை குற்றவியல் வழக்காக மாற்றுவதை ஏற்றுக் கொள்ள முடியாது,' என கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement