வியாசர்பாடி சிறுமி கர்ப்பம் சிறுவன் மீது 'போக்சோ' வழக்கு

எம்.கே.பி.நகர், வியாசர்பாடியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர், தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். இவருக்கு, 'இன்ஸ்டாகிராம்' எனும் சமூக வலைதள பக்கம் வாயிலாக 17 வயது சிறுவன் அறிமுகமாகி உள்ளான். தொடர்ந்து, இருவரும் காதலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் சிறுமி கடும் வயிற்றுவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர், ராயபுரம், ஆர்.எஸ்.ஆர்.எம்., மகப்பேறு மருத்துவமனையில் அழைத்து சென்றனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும், சிசு வளர்ச்சியின்றி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நேற்று மீண்டும் கடும் வயிற்று வலியால் சிறுமி பாதிக்கப்படவே, குடும்பத்தினர் ஆர்.எஸ்.ஆர்.எம்., அரசு மகப்பேறு மருத்துவமனையில் சேர்த்தனர். வளர்ச்சியின்றி இருந்த சிசு, சிறுமியின் வயிற்றில் இருந்து அகற்றப்பட்டது.

இது குறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்படி, எம்.கே.பி.நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறித்து விசாரிக்கும் 'போக்சோ' சட்டத்தில் வழக்கு பதிந்து சிறுவனிடம் விசாரிக்கின்றனர்.

Advertisement