நான்காவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை

2

கோவை : கோவையில் தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவி, நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த அனுப்பிரியா, 19; கோவையில் தனியார் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லுாரியில் முதலாம் ஆண்டு, ரெஸ்பரேடரி தெரபி படித்தார். படிப்பின் ஒரு பகுதியாக, இக்கல்லுாரியில் படிக்கும் மாணவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில், செய்முறை பயிற்சி மேற்கொள்கின்றனர். பயிற்சிக்கு வந்த வெளி மாவட்ட மாணவி ஒருவரின் பையில் இருந்த, 1500 ரூபாய் காணாமல் போயுள்ளது.

மாணவி புகாரில் பேராசிரியர்கள் விசாரித்துள்ளனர். பிற மாணவர்களை அனுப்பி விட்டு, அனுப்பிரியாவிடம் தனியாக விசாரித்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த அனுப்பிரியா, மருத்துவமனையின் நான்காவது மாடிக்கு சென்று, கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். பீளமேடு போலீசார், உடலை கைப்பற்றி, வழக்கு பதிவு செய்தனர்.

உயிரிழந்த மாணவியின் தாய், சகோதரர் மற்றும் சக மாணவ - மாணவியர், கோவை அரசு மருத்துவமனை பிரேத பரிசோதனை கிடங்கு முன், நேற்று திரண்டனர். மாணவியிடம் தனியாக விசாரித்த கல்லுாரி முதல்வர் மற்றும் இரு பேராசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், மாணவி குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.


இழப்பீடு வழங்க நிர்வாகத்தினர் ஒப்புக் கொண்டதையடுத்து, மாணவியின் உடலை பெற்றோர் பெற்றுச் சென்றனர்.

Advertisement