மாற்றுத்திறனாளிகளுக்கு முகாம்

விருத்தாசலம்: 'தினமலர்' செய்தி எதிரொலியால், விருத்தாசலத்தில் மாற்றுத்திறனாளிகள் பரிசோதனை முகாம் நடந்தது.

விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் வகையில் மாதந்தோறும் சிறப்பு பரிசோதனை முகாம் நடக்கிறது.

இதில், விருத்தாசலம், திட்டக்குடி தாலுகாவை சேர்ந்த அனைவரும் ஒரே நேரத்தில் பங்கேற்பதால், நெரிசலில் சிக்கி பலர் சிரமமடைந்தனர்.

அவர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் அவதியடைந்தனர்.

இதனைச் சுட்டிக்காட்டி, 'தினமலர்' நாளிதழில் கடந்த மாதம் செய்தி வெளியானது. தொடர்ந்து, விருத்தாசலம் தாலுகாவை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் நேற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு பரிசோதனை முகாம் நடந்தது.

மருத்துவர்கள் ஆனந்த், ராம்குமார், கலையரசி, கோவிந்தராஜ், திலகர் ஆகியோர் பரிசோதனை செய்து, மாற்றுத்திறனுக்குரிய விழுக்காடுகளை பரிந்துரை செய்தனர்.

மேலும், விழுதுகள் என்ற நடமாடும் பிசியோதெரபி வாகனத்தில், சிறப்பு தசை பயிற்சி தரப்பட்டது. கூட்ட நெரிசலின்றி பரிசோதனை நடந்ததால், மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அதேப் போன்று, பதிவு செய்த மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் பகுதிகளுக்கு நடமாடும் வாகனம் நேரடியாக சென்று பயிற்சி தரப்பட உள்ளது. திட்டக்குடி தாலுகா மற்றும் மங்கலம்பேட்டை வட்டாரம் என தனித்தனியே பிரித்து மற்றொரு நாளில் மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசோதனை முகாம் நடத்தப்பட உள்ளது.

Advertisement