என்.எல்.சி., ரகசிய ஓட்டெடுப்பு பி.எம்.எஸ்., தொழிற்சங்கம் மனுத்தாக்கல்

நெய்வேலி: என்.எல்.சி.,யில் நடக்க உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான ரகசிய ஓட்டெடுப்பில் போட்டியிட பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தனர் மனுத்தாக்கல் செய்தனர்.
நெய்வேலி என்.எல்.சி.,யில் நடக்க உள்ள அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கத்திற்கான ரகசிய ஓட்டெடுப்பில் போட்டியிட பி.எம்.எஸ். தொழிற்சங்கத்தனர் மனுத்தாக்கல் செய்தனர். என்.எல்.சி., பாரதிய மஸ்தூர் சங்கத்தின் தலைவர் வீர வன்னிய ராஜா தலைமையிலான நிர்வாகிகள் நேற்று மண்டல தொழிலாளர் ஆணையர் சவுத்ரியிடம் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
மாநில அமைப்பு செயலாளர் தங்கராஜ், கடலுார், விழுப்புரம் பாரதிய மஸ்துார் சங்க பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம், என்.எல்.சி., பி.எம்.எஸ்., சங்க பொதுச் செயலாளர் சகாதேவ்ராவ், செயல் தலைவர் அன்பழகன், பொருளாளர் தியாகராஜன், தேசிய ஒப்பந்த தொழிற்சங்க துணைத் தலைவர் விக்னேஸ்வரன், தொழிற்சங்க பிரமுகர் வெங்கடாசலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
சங்க தலைவர் வீரவன்னியராஜா கூறுகையில், 'மத்தியில் ஆளும் பா.ஜ., வின் தொழிற்சங்கமான பாரதிய மஸ்துார் சங்கத்தை சார்ந்த தொழிலாளர்களை வெற்றி பெற செய்தால், என்.எல்.சி., தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு வேலை பெற்று தருவது. ஒப்பந்த மற்றும் இன்கோசர்வ் சொசைட்டி தொழிலாளர்களை நிரந்தரப்படுத்துவது. என்.எல்.சி., நிறுவனத்திற்கு வீடு, நிலம் கொடுத்தவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வேலை பெற்று தருவது. மருத்துவ காப்பீடு மருத்துவ சலுகைகளை அதிகாரிகளுக்கு இணையாக பெற்றுத்தருவது உள்ளிட்ட கோரிக்கைகளை நேரடியாக மத்திய நிலக்கரித்துறை அமைச்சரிடம் கொண்டு சென்று நிறைவேற்றி தருவோம்' என்றார்.