கேரள அரசு பஸ்சின் தரத்தை உறுதி படுத்த வேண்டுகோள்
மூணாறு: இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளில் இயக்கப்படும் கேரள அரசு பஸ்களின் தரத்தை உறுதி படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இடுக்கி எம்.பி. டீன் குரியாகோஸ், போக்குவரத்து துறை அமைச்சர் கணேஷ்குமாருக்கு கடிதம் அனுப்பினார்.
அதில் கூறியிருப்பதாவது: இடுக்கி மாவட்டத்தில் மலையோர பகுதிகளுக்கு இயக்கப்படும் அரசு பஸ்கள் பராமரிப்பு இன்றியும், தரமற்றவைகளாவும் உள்ளன. பிற பகுதிகளில் இயக்கப்படும் பஸ்கள் போன்று இடுக்கி மாவட்டத்தில் இயக்க இயலாது. அதன் விளைவாக தான் நேற்று முன்தினம் நேரியமங்கலம் அருகே அரசு பஸ் விபத்தில் சிக்கி 14 வயது சிறுமி பலியானார். அது போன்று பீர்மேடு அருகே நடந்த விபத்திலும் உயிரிழப்பு ஏற்பட்டது. அதனை முக்கிய பிரச்னையாக எடுத்துக் கொண்டு மலையோர பகுதிகளுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக பழக்கமுள்ள பஸ்களை இயக்கவும், அவற்றை சிறந்த முறையில் பராமரித்து தரத்தை உறுதி படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.