ஒரே பகுதியில் முகாமிட்ட 3 ஆண் காட்டு யானைகள்
மூணாறு: மூணாறு அருகே ஒரே பகுதியில் மூன்று ஆண் காட்டு யானைகள் நேற்று பகலில் முகாமிட்டதால், பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் அச்சத்துடன் நடமாடினர்.
மூணாறு பகுதியில் படையப்பா, ஒரு தந்தத்தைக் கொண்ட இரண்டு ஒற்றை கொம்பன்கள், விரிந்த கொம்பன் என நான்கு ஆண் காட்டு யானைகள் கலங்கடித்து வருகின்றன. அவற்றில் ஒற்றை கொம்பன்கள் இரண்டும் ஒன்றாக சுற்றித்திரியும்.
இந்நிலையில் மூணாறில் இருந்து கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் படையப்பா, ஒற்றை கொம்பன் ஒன்று ஆகியவை நேற்று பகலில் முகாமிட்டன.
அதன் அருகே கல்லார் எஸ்டேட் தேயிலை தோட்டத்தில் விரிந்த கொம்பன் முகாமிட்டது.
அவற்றை வனத்துறை அதிரடி படையினர் கண்காணித்தனர்.ஒரே பகுதியில் மூன்று ஆண் காட்டு யானைகள் முகாமிட்டதால் பொதுமக்கள், தொழிலாளர்கள் ஆகியோர் அச்சத்துடன் நடமாடினர்.