சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பி.ஆர்.கவாய் பெயர் பரிந்துரை

புதுடில்லி : உச்ச நீதிமன்றத்தின், 52வது தலைமை நீதிபதியாக, பூஷன் ராமகிருஷ்ண கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா பரிந்துரைத்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா உள்ளார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதவியேற்ற இவரின் பதவிக்காலம், அடுத்த மாதம் 13ம் தேதி முடிவடைகிறது.
இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியின் பெயரைப் பரிந்துரைக்குமாறு தற்போதைய தலைமை நீதிபதியிடம் மத்திய சட்டத்துறை அமைச்சகம் ஆலோசனை கேட்டிருந்தது.
இதனை ஏற்று, மூத்த நீதிபதி பி.ஆர்.கவாய் பெயரை, சஞ்சீவ் கன்னா பரிந்துரை செய்துள்ளார். ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு பின், இது இறுதி செய்யப்படும். புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ள பி.ஆர்.கவாய், அடுத்த மாதம் 14ம் தேதி முதல் வரும் நவம்பர் மாதம் வரை ஆறு மாத காலத்திற்கு அந்த பொறுப்பில் இருப்பார்.
மஹாராஷ்டிராவின் அம்ராவதியைச் சேர்ந்தவர் பி.ஆர்.கவாய், 65. கடந்த 1985ல் வழக்கறிஞர் சங்கத்தில் இணைந்த கவாய், மும்பை உயர் நீதிமன்றத்தில் பயிற்சி பெற்றார்.
அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நிர்வாகச் சட்டம் தொடர்பான வழக்குகளில் முக்கிய பங்காற்றியுள்ளார். 1992ம் ஆண்டு அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து, 2003ல் மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாகவும், 2005ல் நிரந்தர நீதிபதியாகவும் ஆனார்.
அடுத்ததாக, 2019ம் ஆண்டு பதவி உயர்வு பெற்று உச்ச நீதிமன்ற நீதிபதியானார். உச்ச நீதிமன்றம் வழங்கிய பல வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகளின் பகுதியாக கவாய் இருந்துள்ளார்.
பணமதிப்பிழப்பு உறுதி செய்த தீர்ப்பு, தேர்தல் பத்திரம் செல்லாது என்ற தீர்ப்பு வழங்கிய அமர்வில் இவரும் ஒருவர்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்கு பின், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து தலைமை நீதிபதியாகும் இரண்டாவது நபர் இவர்.

