குருவை திட்டினால் மன்னிப்பு கிடையாது சண்முக திருக்குமரன் பேச்சு

மதுரை: கடவுளை திட்டினால் மன்னிப்பு உண்டு குருவைத்திட்டினால் கடவுளே மன்னிக்க மாட்டார் என சொற்பொழிவாளர் சண்முக திருக்குமரன் பேசினார்.

காஞ்சி காமகோடி மடம் மதுரை கிளையில் பங்குனி மாத அனுஷ விழா நடந்தது. மஹா பெரியவர் விக்ரகத்துக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை, வெள்ளி பாதுகைக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

விழாவில் சண்முகதிருக்குமரன் பேசியது:

குருவின் துணையில்லாமல் கடவுளைத் தரிசிக்க இயலாது. குருவே நமக்கு சரியான பாதையைக் காட்டுபவர். குருவின் அனுக்கிரகம் பெற்றவர்களுக்குத் தான் கடவுளின் அருள் கிடைக்கும் என்கின்றன ஞான நூல்கள். மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில், நம்மைப் பெற்ற தாய் தந்தையருக்கு அடுத்த நிலையில் வைத்துப் பூஜிக்கத் தகுந்தவர் குரு ஒருவரே. குருவருள் இல்லையேல் திருவருள் கிடைப்பது கடினம்.

அறிவை கொடுப்பது ஆசிரியர்கள். ஞானத்தைக் கொடுப்பவர்கள் குருமார்கள். குருவின் மீது ஆத்மார்த்தமான பக்தி செய்தல் அவசியம் குரு பக்தி மிக முக்கியமானது. கடவுளை திட்டினால் கூட மன்னிப்பு உண்டு. குருவை திட்டினால் கடவுளே மன்னிக்கமாட்டார். இவ்வாறு பேசினார். ஏற்பாடுகள் மடத்தின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

சோழவந்தான்: சோழவந்தான் மலையாளம் கிருஷ்ண அய்யர் பாடசாலையில் அனுஷ வைபவத்தை முன்னிட்டு ரிக் வேத பாராயணம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஹரிஷ் சீனிவாசன் அய்யர், நிர்வாகி கே. ஸ்ரீகுமார், பாலசுப்பிரமணியன், அத்யபகர் வரதராஜ பண்டிட் செய்திருந்தனர்

முள்ளிப்பள்ளம் கிளையில் அனுஷ வைபவம் நடந்தது. ஏற்பாடுகளை வெங்கட்ராமன், வீர மணிகண்டன் செய்திருந்தனர். மே 2ல் இங்கு ஆதிசங்கரர் ஜெயந்தி உத்ஸவம் நடைபெற உள்ளது.

Advertisement