பெண் முகம் தெரியும் வீடியோ வெளியிட்டவர் மீது நடவடிக்கை?
பெங்களூரு : 'மெட்ரோவில் அநாகரிக செயல்களில் ஈடுபட்ட பெண்ணின் முகத்தை மறைக்காமல் வீடியோ வெளியிட்டவர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என சமூக ஆர்வலர் வலியுறுத்தி உள்ளார்.
பெங்களூரில் உள்ள மாதவாரா மெட்ரோ நிலையத்தில் சில தினங்களுக்கு முன் இளம் ஜோடியினர் அநாகரிகமாக நடந்து கொண்டனர். இது வீடியோவாக கடந்த 10ம் தேதி, கர்நாடகா போர்ட்போலியோ என்ற எக்ஸ் பக்கத்தில் வெளியாகியது. வீடியோவில், இளம் ஜோடியினர் இருவரது முகங்களும் தெளிவாக தெரிந்தன.
இவ்வீடியோ இணையத்தில் பரவியது. இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருத்து தெரிவித்தனர். பெண்ணின் முகம் தெளிவாக தெரியும் படி வீடியோ வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல வக்கீலும், சமூக ஆர்வலருமான வினய் கே ஸ்ரீனிவாசா கருத்து தெரிவித்து உள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:
வீடியோவில் இளம் பெண்ணின் முகம் தெளிவாக தெரியும்படி பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதனால், அப்பெண்ணின் வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட விஷயத்தில் தலையிடுவது, அவமதிப்பு செய்வது சட்டப்படி குற்றமாகும். இது, பி.என்.எஸ்., சட்டம் 79ன் கீழ் சிறைத்தண்டனைக்கு வழிவகுக்கும். அவர்கள் ஆடையை கழற்றிவிட்டு ஏதாவது செய்திருந்தால் அது குற்றமாக கருதப்பட்டிருக்கும். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. எனவே, போலீசார் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து, வீடியோ வெளியிட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறினார்.