1ம் வகுப்பு மாணவர் சேர்க்கை வயது வரம்பில் அரசு தளர்வு

பெங்களூரு : ''நடப்பாண்டு மட்டும் முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு 5 வயது 5 மாதங்கள் போதும் என தளர்வு அளிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு முதல் வழக்கமான வயது வரம்பு தொடரும்,'' என துவக்க கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பா அறிவித்தார்.
மத்திய அரசு, முதல் வகுப்பில் சேரும் மாணவ - மாணவியருக்கு 6 வயது இருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தது. இதற்கு பெற்றோர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அரசு குறிப்பிடும் வயதை நிர்ணயித்தால், குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பதில் ஓராண்டு தாமதம் ஏற்படும். எனவே, வயது வரம்பை குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
இது தொடர்பாக, கர்நாடக கல்வி துறை அமைச்சர் மது பங்காரப்பாவிடமும், பெற்றோர் முறையிட்டனர். அதிகாரிகளுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார்.
இந்நிலையில், பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
முதலாம் வகுப்பில் சேரும் மாணவர்களின் வயது ஜூன் 1ம் தேதியுடன் 6 வயது முடிந்திருக்க வேண்டும் என்று கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நாடு முழுதும் 6 வயது கட்டாயம் ஆக்கப்பட்டு உள்ளது. இந்தாண்டு மட்டும் வயது வரம்பில் தளர்வு அளிக்கிறோம்.
எனவே, பெற்றோரின் கோரிக்கை, மாநில கல்வி கொள்கை கமிஷன் சிபாரிசின்படி, ஜூன் 1ம் தேதியுடன் 5 வயது 5 மாதம் இருக்கும் குழந்தைகளை, ஒன்றாம் வகுப்பில் சேர்க்கலாம். முதல் வகுப்பில் சேரும் மாணவர்கள், கண்டிப்பாக யு.கே.ஜி., அல்லது அதற்கு நிகரான கல்வியை பயின்றிருக்க வேண்டும்.
அடுத்தாண்டு முதல் 6 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். வயது வரம்பை குறைக்கும்படி பெற்றோர் தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். உங்கள் குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுத்து படிக்க வைக்காதீர்கள். இதனால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கும்.
பி.யு.சி., இரண்டாம் ஆண்டு தேர்வில், 1.69 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதேவேளையில் இவர்களில் 1.57 லட்சத்துக்கும் அதிகமானோர், மறு தேர்வு எழுத விண்ணப்பித்து உள்ளனர். இவர்கள் தேர்ச்சி பெற இன்னும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு முடிவுகள், மே முதல் வாரத்தில் வெளியிடப்படும். இம்முறை கூடுதல் மதிப்பெண் கிடையவே கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.