பெங்களூரில் கொட்டி தீர்த்த மழை நகர் முழுதும் போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு : பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல மாவட்டங்களில் மூன்றாவது நாளாக நேற்றும் கன மழை பெய்தது. பெங்களூரில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களின் வளிமண்டல கீழடுக்கு பகுதியில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது.

இதன் காரணமாக, தென் மாநிலங்களில் பரவலாக மழை பெய்கிறது. கர்நாடகாவின் உட்பகுதியில் வரும் 20ம் தேதி வரை கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

பெங்களூரில் நேற்று மாலை மெஜஸ்டிக், ஜெயநகர், கே.ஆர்.,புரா, கே.ஆர்., மார்க்கெட், ஜே.பி., நகர், விஜயநகர், ராஜாஜி நகர், மஹாதேவபுரா, டின் பேக்டரி, மாரத்தஹள்ளி உட்பட பல இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. நகரின் பல சாலைகளில் மழைநீர் தேங்கியதால், இரு சக்கர வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

கே.ஆர்.,புரம் கஸ்துாரி நகரில் இருந்து எம்.எம்.டி., சந்திப்பு நோக்கி செல்லும் சாலையில், மழைநீர் தேங்கியது.

இதுபோன்று ஹெப்பால், ராமமூர்த்தி நகர் சுரங்கப்பாதையில் இருந்து டின் பேக்டரி வரை, ரெயின்போ மருத்துவமனையில் இருந்து கார்த்திக் நகர் வரையிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது.

சிலரின் வாகனங்களின் சைலன்சரில் தண்ணீர் புகுந்ததால் பழுதானது. நீண்ட நேரம் முயற்சித்தும் வாகனம் இயங்காததால், அந்தந்த பகுதியில் உள்ள மெக்கானிக் கடைகளில் விட்டு சென்றனர்.

அதுபோன்று பல்லாரி, சித்ரதுர்கா, தார்வாட், கதக், கொப்பால் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்தது. கடலோர மாவட்டங்கள், மலை மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்தது.

விஜயநகரா மாவட்டத்தில் கூட்லிகியில் பலத்த காற்றுடன் வீசிய கன மழையில், சித்தேஷ் என்பவரின் 9 ஏக்கர் நிலத்தில் விளைந்திருந்த பல பப்பாளி மரங்கள் முறிந்து விழுந்தன.

Advertisement