வீரசைவ லிங்காயத் மஹாசபா இன்று ஆலோசனை கூட்டம்

பெங்களூரு : ஆளுங்கட்சி காங்கிரசுக்கு தலைவலியை ஏற்படுத்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, அகில இந்திய வீரசைவ மஹாசபா, இன்று ஆலோசனை நடத்தி தங்கள் முடிவை அறிவிக்கவுள்ளது.

ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு ஒக்கலிகர் சமுதாயம், கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோன்று லிங்காயத் சமுதாயத்தினரும் கண்டித்துள்ளனர். இது குறித்து அகில இந்திய வீரசைவ மஹாசபா ஆலோசனை கூட்டம் இன்று நடக்கவுள்ளது.

இதில் வீரசைவ மஹாசபாவின் தேசிய தலைவர் ஷாமனுார் சிவசங்கரப்பா, மாநில தலைவர் சங்கர் பிதரி, இதே சமுதாயத்தின் வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே, தொழிற் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், தோட்டக்கலைத்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன், சிறிய தொழில் துறை அமைச்சர் சரண பசப்பா தர்ஷனாபூர், மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் பங்கேற்க வாய்ப்புள்ளது.

அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்ட, ஜாதி வாரி கணக்கெடுப்பு அறிக்கை குறித்து, ஆய்வு செய்ய ஐவர் அடங்கிய வல்லுநர் குழுவை, வீரசைவ மஹாசபா அமைத்துள்ளது.

இக்குழுவினர் அறிக்கையின் சிபாரிசுகளை ஆய்வு செய்து, லிங்காயத் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களுக்கு என்ன முடிவு செய்வது என்பது குறித்து, ஆலோசனைகள் கூறுவர். மாநிலத்தில் லிங்காயத் சமுதாயத்தினர், அதிக எண்ணிக்கையில் உள்ளனர். ஆனால் அறிக்கையில் இவர்களின் எண்ணிக்கை குறைவாக காட்டப்பட்டதால், மஹாசபா அதிருப்தி அடைந்துள்ளது.

'அறிக்கை விவேகமற்றது. குளறுபடிகள் நிறைந்துள்ளன. இதை நிராகரித்து பதிதாக ஆய்வு நடத்த வேண்டும்' என, வீரசைவ லிங்காயத் மஹாசபா மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இன்றைய கூட்டத்தில் இது தொடர்பாக, தீர்மானங்கள் எடுக்கப்படலாம்.

Advertisement