அரசின் தலைமைத்துவ விருது தேர்வில் வேண்டாம் பாரபட்சம்; தலைமையாசிரியர்கள் போர்க்கொடி

2

மதுரை : சிறப்பாக செயல்படும் அரசு பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் 'அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதை' அரசியல் சிபாரிசு இன்றி தகுதியானவர்களுக்கு வழங்க வேண்டும் என தலைமையாசிரியர்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர்.

இவ்விருது ஆண்டுதோறும் 100 தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் என 2022ல் அறிவிக்கப்பட்டது. இதன்படி 2023 -2024 கல்வியாண்டில் அரசு தொடக்க, நடு, உயர், மேல்நிலை பள்ளிகளை சேர்ந்த 100 பேருக்கு விருது வழங்கப்பட்டது. உடன் பள்ளி மேம்பாட்டிற்கு ரூ.10 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. அப்போது அரசியல், அதிகாரிகள் சிபாரிசு அடிப்படையில் பலர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டதாக புகார் எழுந்தது.

இந்நிலையில் 2024 -2025 கல்வியாண்டிற்கான விருது தேர்வு பணி தற்போது துவங்கியுள்ளது. இதற்காக மாவட்டம் வாரியாக சி.இ.ஓ.,க்கள் தலைமையில் 5 பேர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்குழுக்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தி தேர்வு செய்யவும், அதற்கான மதிப்பீட்டு அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்தாண்டு எழுந்த சிபாரிசு சர்ச்சை இன்றி தகுதி அடிப்படையில் இந்தாண்டு விருதுக்கு தேர்வு செய்ய வேண்டும் என தலைமையாசிரியர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

அவர்கள் கூறுகையில், பள்ளி செயல்பாடு, கட்டமைப்பு வசதி, தலைமையாசிரியர் தனித்திறன், பள்ளி வளர்ச்சியில் அவரது பங்கு, மாணவர் தேர்ச்சி உட்பட பல்வேறு பிரிவுகளில் தேர்வுக் குழு ஆய்வு செய்து மதிப்பெண் வழங்குகிறது. அதன் அடிப்படையில் சிபாரிசுக்கு இடமளிக்காமல் விருதுக்கான தேர்வு நடக்க வேண்டும் என்றனர்.

Advertisement