'அந்த 3 பேரிடம் இருந்து என் குடும்பத்தை காப்பாத்துங்க...' கந்துவட்டியால் பழவியாபாரி தற்கொலை

மதுரை: மதுரையில் ரூ.பல லட்சம் கடன் வாங்கிய நிலையில் 3 பேரை குறிப்பிட்டு 'அவர்களிடம் இருந்து என் குடும்பத்தை காப்பாத்துங்க' என கடிதம் எழுதிவைத்துவிட்டு பழவியாபாரி கணேசன் 46, தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்தவர் கணேசன். மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் பழக்கடை நடத்தி வந்தார். தொழில் வளர்ச்சிக்காக சிலரிடம் கடன் வாங்கினார். அதை வட்டியுடன் அடைக்க மேலும் சிலரிடம் கடன் வாங்கினார்.
இந்நிலையில் 2 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.கடிதத்தில், '(ஒருவரின் பெயரை குறிப்பிட்டு) வாங்கிய கடனுக்கு ரூ.20 லட்சம் செலுத்திவிட்டேன். ஆனாலும் நான் தந்த செக் புக், பத்திரத்தை தராமல் என் கடையை எழுதி வாங்கிவிட்டார்' என தெரிவித்துள்ளார்.
மேலும் 3 பேரின் பெயர்களை குறிப்பிட்டு 'இவர்களிடம் இருந்து என் குடும்பத்தை காப்பாத்துங்க' எனவும் எழுதியுள்ளார். கந்துவட்டி கொடுமையால் வியாபாரி தற்கொலை செய்து கொண்டது சக வியாபாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
யார் யாரிடம் கடன் வாங்கினார், கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்கள் எவ்வளவு கடன் கொடுத்தார்கள் என கருப்பாயூரணி போலீசார் விசாரிக்கின்றனர்.