தி.மு.க., அரசுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம்


ஓசூர்:

தேர்தல் வாக்குறுதியில் கூறிய திட்டங்களை செயல்படுத்த தவறிய, தி.மு.க., அரசை கண்டித்து தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர், ஓசூர் மின்வாரிய நிர்வாக பொறியாளர் அலுவலகம் முன், சாவு மணி அடித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி தலைமை வகித்தார். மத்திய மாவட்ட செயலாளர் சீனிவாசன், கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி, மகளிரணி மாநில தலைவி முத்துலட்சுமி துணைத்தலைவி நாகராணி முன்னிலை வகித்தனர்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
கடந்த, 2021ல், தி.மு.க., தேர்தல் வாக்குறுதியாக, விவசாய மின் இணைப்புக்கு மனு அளித்து காத்திருக்கும், 6 லட்சம் விவசாயிகளுக்கும், ஆட்சிப்பொறுப்பேற்று, 90 நாட்களில் மின் இணைப்பு வழங்கப்படும் என வாக்குறுதி அளித்து ஆட்சியமைத்தது. நான்காண்டுகள் முடிந்தும், 1.85 லட்சம் விவசாயிகளுக்கு மட்டுமே மின் இணைப்பு வழங்கியுள்ளது. ஆனால் அதற்கு ஆவணங்கள் இல்லை.
விவசாய மின் இணைப்புக்காக, 10,000 ரூபாய், 25,000, 50,000 ரூபாயை கட்டி ஏராளமான விவசாயிகள் ஓசூர், தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி விவசாயிகள் காத்து கிடக்கின்றனர்.
முன்னுரிமை அடிப்படையில் மின் இணைப்பு வழங்காமல், முறைகேடாக மின் இணைப்பு வழங்கப்படுகிறது. தி.மு.க., அரசை நம்பிய விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.
அதே போல பூந்தோட்ட மின் இணைப்புகள் பெற்ற விவசாயிகளுக்கும், கட்டணத்தை ரத்து செய்து உரிமை மின்சாரமாக வழங்க வேண்டும். இல்லையெனில், தி.மு.க., அரசுக்கு, விவசாயிகள் தக்க பாடம் புகட்டுவர்.
இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement